பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 429

                   72
சீர்மீதா டியசெருக்கிற் றெளியாக்கோ னிவைகேட்டுப்
போர்மீதா டியசேனைப் பொலிவெண்ணா மறுத்தானோ
கார்மீதா டியகொடிநீண் மாடநகர் காடாக்கிப்
பார்மீதா டியவெருவே படுநாளை யெனத்துயின்றான்.
 
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியாக் கோன் இவை கேட்டு,
"போர் மீது ஆடிய சேனைப் பொலிவு எண்ணா, மறுத்தானோ?
கார்மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி,
பார்மீது ஆடிய வெருவே படும் நாளை" எனத் துயின்றான்.

     தான் பெற்ற வெற்றிச் சிறப்பின் மிகுதியால் உண்டான அகந்தையால்
உண்மை கண்டு தெளியாத மன்னன் சினக்கரன் இவற்றைக் கேட்டு,
"போரின் மீது மனம் பதித்த என் சேனையின் பொலிவை எண்ணிப்
பாராமல், யூதர் மன்னன் பணிய மறுத்தானோ? அப்படியானால், மேகத்தின்
மீது அசைந்தாடிய நீண்ட கொடியை உடைய மாளிகைகள் நிறைந்த
எருசலேம் நகரை நாளையே காடாக்குவேன். அப்பொழுது, இவ்வுலகம்
முழுவதும் ஆடுவதற்கான அச்சம் ஏற்படும்" என்று கூறித்துயில்
கொண்டான்.

 
                    73
குன்றுச்சிச் சுடர்ப்பழியாக் கொளுத்தியபுன் விளக்கன்றோ
வென்றுச்சி வானாளும் வேந்தனெதிர் பூவுலகி
னின்றுச்சி நிறுவரசர் நினைத்தபகை யாங்காணா
யன்றுச்சி முடிகவிழ வவற்காங்கா யவைகேண்மோ.
 
"குன்று உச்சிச் சுடர்ப் பழியாக் கொளுத்திய புன் விளக்கு அன்றோ,
வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர், பூ உலகில்
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம்? காணாய்.
அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ,

     சினக்கரன் கதையை இதுவரை கூறி வந்த குண்ணன் இடையே
நாவகனை முன்னிலைப்படுத்தி இது கூறுகின்றான் :

     "எல்லாவற்றையும் வென்று, வானின் உச்சியில் நின்று ஆளும்
அரசனாகிய ஆண்டவனுக்கு எதிராக, இம் மண்ணுலகில் நின்று தம்
தலையை நிமிர்த்துகின்ற அரசர் நினைத்த பகை எதற்கு ஒப்பாகும்?
மலையின் உச்சியில் நிற்கின்ற பகலவனைப் பழிக்குமாறு கொளுத்தி வைத்த
சிறு விளக்கிற்கு ஒப்பாக அன்றோ ஆகும்? இதனை எண்ணிப் பார். அன்று
தன் தலையில் அணிந்த முடி கவிழுமாறு அச்சினக்கரனுக்கு
நிகழ்ந்தவற்றைக் கேள்".