பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 430

     கேண்மோ - கேள் + மோ: 'மோ' முன்னிலையசை.

 
                 74
நேரறுநூ றெளிவறிவி னீதிவலோள் பகைத்திரவிற்
பாரறுநூங் கிரதமுகள் பரிகரிவாள் வில்வேலென்
றாரறுநூங் கடறானை யற்றறக்கண் ணிமையாமுன்
னோரறுநூ றுறழ்முந்நூ றுடையையா யிரர் மாய்ந்தார்.
 
"நேர் அறு நூல் தெளிவு அறிவின் நீதி வலோன் பகைத்து, இரவில்,
பார் அறு நூங்கு இரதம், உகள் பரி, கரி, வாள், வில், வேல், என்று,
ஆர் ஆறு நுங்கு அடல் தானை அற்று அற, கண் இமையாமுன்,
ஓர் அறுநூறு உறழ் முந்நூறு உடை ஐயாயிரா மாய்ந்தார்.

     நிகரற்ற வேத நூல் தெளிந்து கண்ட ஞானத்தின்படி நீதியில்
வல்லவனாகிய ஆண்டவன் சினக்கரனைப் பகைத்தமையால், அன்று
இரவில், நிலத்தை அறுத்துச் செல்லும் பெரிய தேர்கள், பாயும் குதிரைகள்,
யானைகள்,வாள்கள், வில்லுகள், வேல்கள், என்று இவ்வாறு நிறைந்த ஆறு
வகைப்பட்ட பெரிய திறம் மிக்க சேனை அடியோடு அறுமாறு, கண் இமை
கொட்டும் நேரத்திற்குள், ஓர் அறுநூறு கொண்டு முந்நூற்றைப் பெருக்கி,
அதனோடு கூட்டிய ஐயாயிரம் வீரர் மடிந்தனர்.

     600 x 300 = 180000 + 5000 = 1,85,000. நால் வகைச் சேனையுள்,
காலாட் படையை வாள் வில் வேள் என்று முப்படையாகக்
கொண்டமையின், கரி பரி தேரோடு அறுவகைச் சேனை ஆயிற்று. தேர்
தடம் பதிதலின், நிலத்தை அறுத்துச் செல்வதாகக் கூறப்பட்டது.

 
                   75
பானிறைவன் செக்கர்வான் பந்தற்கீழ் விளக்கேந்த
வீனிறைவ னறுதானை யிற்றழிந்த நிலைகண்டான்
வானிறைவன் றிறங்கண்டான் வாழ்க்கையற நகைகண்டான்
றானிறைவ னலனென்னத் தளர்ந்தஞ்சி யோடினனால்.