பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 434

"சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி, மற்ற
ஏர் தங்கும் உருவத் தேவர் இறைஞ்சு இலேம்" என்ன மூவர்
கார் தங்கும் இடியின் காய்ந்தோன், "கடுகி, அவ் யூதர் தம்மைப்
பீர் தங்கும் உருத் தீச் சூளை பெய்மின் ஈண்டு!" என்றான் மாதோ.


     அங்கு இருந்த மூவர், "சிறப்புப் பொருந்திய வல்லமையில் நிகரின்றி
ஒன்றாய் விளங்கும் எம் ஆண்டவனை அல்லாமல், அழகு பொருந்திய
உருவமாய்ச் சமைத்த தேவர்களை யாம் வணங்கமாட்டோம்" என்றனர்.
அதனைக் கேட்டு, கருமேகத்தில் தங்கும் இடி போலச் சினந்த நபூக்கன்,
"இந்த யூதர்களை இங்கேயே அச்சம்தரும் செந்நிற நெருப்புச் சூளையில்
விரைவாய்த் தள்ளுங்கள்!" என்றான்.

 
                80
வம்மிய புகையிற் சூளை
     வாயங்காந் தெரிந்த செந்தீத்
தும்மியவ் வேவல் செய்தோர்
     தொகுவுயிர் நக்கிக் கோறிப்
பொம்மிய வுவப்பின் மூவர்
     புணர்ந்தகட் டன்றி வேகா
பம்மிய பைம்பூஞ் சோலைப்
     பதியென வங்கண் வாழ்ந்தார்.
 
வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து, எரிந்த செந் தீத்
தும்மி, அவ் ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கிக் கோறி,
பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி வேகா,
பம்மிய பைம் பூஞ்சோலைப் பதி என அங்கண் வாழ்ந்தார்.

     ஓங்கிய புகையோடு கூடிய சூளை தன் வாயைத் திறந்து, எரிந்து
கொண்டிருந்த செந்நிற நெருப்பைச் சிதறியமையால், அரசனது அந்தக்
கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருந்த சேவகரின் தொகையான
உயிர்களை நக்கிக் கொன்றது. அம்மூவரோ மிகுந்த மகிழ்ச்சியோடு,
தம்மைக் கட்டியிருந்த கட்டு வெந்ததேயன்றித் தாம் வேகாமல், செறிந்த
பசுமையான பூஞ்சோலையே அவ்விடம் என்பது போல் உயிருடன்
இருந்தனர்.