பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 437

          84
ஏழ்வரும் வருடத் திவ்வா
     றிழிபட விலங்கின் சாயற்
போழ்வரு நெஞ்சி னோகப்
     புணரறி வெஞ்சான் றன்னைத்
தாழ்வரு முளத்தந் நாதற்
     றாழ்ந்தபி னுரித்தன் மெய்யுங்
கேழ்வரு முடியும் பெற்றுக்
     கெழும்விளக் கெவர்க்கு மானான்.
 

ஏழ் வரும் வடத்து இவ்வாறு இழிபட, விலங்கின் சாயல்
போழ் வரு நெஞ்சின் நோகப் புணர் அறிவு எஞ்சான்; தன்னைத்
தாழ்வு அரும் உளத்து அந் நாதன் தாழ்ந்த பின், உரித் தன் மெய்யும்
கேழ் வரு முடியும் பெற்றுக் கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான்.


     நபூக்கன் ஏழு வருட காலமாய் இவ்வாறு இழிவு பட்டான்; தான்
பெற்ற விலங்குச் சாயல் தன்னைப் பிளக்கும் தன்மையாய் உள்ளம்
நோகுமாறு தன்னோடு பொருத்திய மனித அறிவு குறைபடாதிருந்தான்;
தன்னைத் தாழ்த்திக் கொள்ளுதற்கு அரிய உள்ளத்தால் அவ்வாண்டவனைத்
தாழ்ந்து வணங்கிய பின், உரிய தன் மனித உடலும் ஒளி பொருந்திய
முடியும் பெற்று, எல்லோருக்கும் நிறை விளக்குப் போல் ஆனான்.

     இவ்வாறு நபூக்கன் செய்தியை முடித்து, எல்லியோதுரன் வரலாற்றைக்
குண்ணன் தொடர்ந்து கூறகின்றான். இது பழைய ஏற்பாடு, II மக்கபேயர்.
3 : 4-40 காண்க.

                    எல்லியோதுரன் இன்னல்

 
                85
மீட்டன்னா ரிறைஞ்சுங் கோயின்
     மிக்கருந் திருவுண் டென்னக்
கேட்டந்நாட் டரச னேவ
     வெல்லியோ துரன்போய்க் கேழ்த்த