பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 441

பால் நிமிர் கனி அருட் பவளக் குன்று இழி
தேன் நிமிர் மொழிப் புனல் செறிந்த வாரியுள்,
கோல் நிமிர் வில்லினன் குளித்து, இன்பு உண்டு அலால்,
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே.

     பால் போல் கனிந்த கருணை கொண்ட பவள மலையினின்று
பாய்ந்த தேன் போன்ற சொல்லாகிய நீர் பெருகி அமைந்த வெள்ளத்தினுள்,
அம்பு ஏற்றிய வில்லைத் தாங்கிய நாவகன் குளித்தான் குளித்ததனால்,
இன்பம் கொண்டானே அல்லாமல், தன் உள்ளத்தில் நிமிர்ந்து நின்ற கரிய
இருள் நீங்காதே ஆயிற்று.

     குளித்தலுக்கு உடல் குளிர்தலும் அழுக்கு நீங்கலுமாகிய இரு பயன்
உண்டு. நாவகன் குளிர்தல்போல் இன்பம் கொண்டு, அழுக்கு நீங்குதல்
போல் மன இருள் நீங்கப் பெற்றிலன். பவளக்குன்று குண்ணனுக்கு
உருவகம்.

 
               90
திங்கணீர்க் கதிரணி தியங்கு மார்பினோன்
றங்கணீர்க் கடவுளு மறையுந் தாமுணர்ந்
தங்கணீர்த் தொழுகமற் றருளிக் கேட்டியொன்
றிங்கணீர்த் தடிகளே யென்று செப்பினான்.
 
திங்கள் நீர்க் கதிர் அணி தியங்கு மார்பினோன்,
"தம் கண் நீர்க் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து,
அங்கண் நீர்த்து ஒழுக. மற்று அருளிக் கேட்டி ஒன்று
இங்கண் நீர்த்து, அடிகளே!" என்று செப்பினான்.

     திங்களின் குளிர்ந்த கதிரைப் பொழியும் முத்து மாலை தவழ்ந்த
மார்பை உடைய நாவகன், குண்ணனை நோக்கி, "யூதர்கள் தம் கண்
போன்ற கடவுளையும் வேதத்தையும் தாம் அறிந்து, அந் நாட்டில் அதற்கு
ஏற்ப ஒழுகட்டும். அடிகளே, இங்கு நல்லியல்போடு நான் மற்றொன்று
சொல்ல, நீ அருளிக் கேட்பாயாக" என்று தொடர்ந்து கூறினான்:

 
                         91
உய்வகை யின்றிவந் துலைந்தெந் நாட்டுரி
யைவகை முறையற வணுகி யோர்முனி
மைவகை மொழியொடு மருட்டி நாடெலாம்
பொய்வகை யழிப்பது பொறுப்ப வோவென்றான்.