பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 442

"உய் வகை இன்றி வந்து உலைந்து, எம் நாட்டு உரி
ஐ வகை முறை அற அணுகி, ஓர் முனி
மை வகை மொழியொடு மருட்டி, நாடு எலாம்
பொய் வகை அழிப்பது பொறுப்பவோ?" என்றான்.


     "ஒரு முனிவன் தன் நாட்டில் பிழைக்க வகையின்றி இங்கு வந்து
அலைந்து, எமது நாட்டுக்கே உரிய ஐந்து வகை முறைகளும் கெடுமாறு
மக்களை அணுகி, இருள் வகைப்பட்ட சொல்லால் மயக்கி நாடு
முழுவதையும் பொய்யின் வகையால் அழிப்பதை நாமெல்லாம் பொறுத்துக்
கொண்டிருக்க வேண்டுமோ?" என்றான்.

     ஐவகை முறைகளாவன; தெய்வ முறை, குல முறை, நூல் முறை,
வழக்கு முறை, ஒழுக்க முறை என்பவை. வழக்கு-பழக்க வழக்கம். தெய்வ
முறையும், உலகிற்கெல்லாம் ஒன்றென்று இராமல், நாடு தோறும் வேறு
படல் வேண்டுமென்பது நாவகன் கருத்து.

 
                 92
தாதைநெட் டுயிர்ப்பினோ டிரங்கிச் சாற்றினான்
மேதைகெட் டிருண்டிரு விழிகெட் டெள்ளிய
பேதைமட் டுண்டெனப் பிதற்றிப் பில்கிய
காதையுட் கொண்டுதீ கலங்க னீர்மையோ.
 
தாதை நெட்டுயிர்ப்பினோடு இரங்கிச் சாற்றினான்:
"மேதை கெட்டு, இருண்டு இரு விழி கெட்டு, எள்ளிய
பேதை, மட்டு உண்டு எனப் பிதற்றிப் பில்கிய
காதை உட் கொண்டு, நீ கலங்கல் நீர்மையோ?

     தந்தையாகிய குண்ணன் அதனைக் கேட்டுப் பெரு மூச்சோடு இரங்கிப்
பின்வருமாறு சொன்னான்: "அறிவுக் கெட்டு, இரண்டு கண்களும் இருண்டு
கெட்டு, இகழத் தக்க பேதையாகிய ஒரு கிழவி, மதுவைஉண்டு மயங்கினாற்
போலப் பிதற்றிச் சொல்லிய கதையை மனத்திற் கொண்டு நீ கலங்குவது
முறையோ?

 
                         93
காற்றிறத் தாடிய கலைப்ப தாகைபோன்
மாற்றிறத் துரைப்பவர் வழுது கேட்கிலாய்
வேற்றிறத் தங்கணா னிருந்த வேலையி
னூற்றிறத் தவர்முறை நோக்கி வாழ்த்தினேன்.