பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 443

"கால் திறத்து ஆடிய கலைப் பதாகை போல்,
மால் திறத்து உரைப்பவர் வழுது கேட்கிலாய்.
வேல் திறத்து அங்கண் நான் இருந்த வேலையில்,
நூல் திறத்து அவர் முறை நோக்கி, வாழ்த்தினேன்.


     "காற்றின் இயல்பிற்கு ஏற்ப ஆடிய துணிக் கொடி போல், மயக்கத்தின்
தன்மையால் சொல்பவரின் பொய் யுரையைக் கேட்டு நடவாதே. வேற்படைத்
தலைவன் என்ற தன்மையாய் நான் அவ்யூதர் நாட்டில் இருந்த போது, வேத
நூல் மூலமாக அவர்களின் சமய நெறியை ஆராய்ந்து, அது சிறந்ததென்று
நானுமே வாழ்த்தினேன்.

 
                 94
தம்முறை யெவர்க்குநீர்த் தகுதி யாய்ப்பொது
மெய்ம்முறைச் சுருதியும் வினைக டீரறத்
தம்முறை யனைத்துநன் றாகக் காண்டியேல்
வெம்முறை வெருளொடு வெறுத்தல் வேண்டுமோ.
 
"தம்முறை எவர்க்கும் நீர்த் தகுதியாய், பொது
மெய்ம் முறைச் சுருதியும் வினைகள் தீர் அறத்து
அம் முறை அனைத்தும் நன்று ஆகக் காண்டியேல்,
வெம் முறை வெருளொடு வெறுத்தல் வேண்டுமோ?

     "அவ்யூதர் தம் நெறிமுறை யாவருக்கும் இயல்பான தகுதி உடையதாய்
இருந்து, பொதுவான உண்மை முறையில் அமைந்த அவர்தம் வேதமும் பாவ
வினைகள் தீர்வதற்கு உரிய ஒழுக்கத்தைக் தழுவிய முறைகள் அனைத்தும்
நன்றாயிருக்கக் காண்பாயாகில், அவற்றைக் கொடிய முறையில் அச்சத்தோடு
வெறுத்தல் வேண்டுமோ?

     முன் 91-ம் பாடலில் ஐவகை முறை என்றவற்றுள், தெய்வ முறையும்
ஒழுக்க முறையும் யாவருக்கும் பொதுவாகலின், அவை யூதரிடையே
நன்முறையாக அமைந்திருக்கக் கண்டால், ஏற்றுக் கொள்வதல்லாமல்,
வெறுப்பது முறையாகாது என்பது கருத்து.

 
               95
பூநகப் புண்ணகப் புனல்செய் பொய்கைகண்
டேநக மலர்ந்தகாச் சென்றன் னான் சொலும்
பாநக வுணர்வுகேட் டறத்தின் பாலதோ
கூநக விழிவதோ கூற நீயென்றான்.