பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 446

மக்களுக்கெல்லாம் பொதுவாக உரைத்தது போல, நாவகனது நெஞ்சில்
குற்றமாகப் பொருந்திக் கிடந்தவற்றைப் பற்றி மாமுனிவனாகிய சூசை
பின்வரும் இவற்றைச் சொல்லலானான்:

     'கிடந்தின' என்பது தொகுத்தல் விகாரம் பெற்றது

 
                      99
உயிரொன் றேயுடை யீரென வுயிருணுங் கூற்றாஞ்
செயிரொன் றேமுழு தொருவுமின் வித்திய செயிரே
துயரொன் றேவிளைத் தடுமெனச் சூழ்ந்துளி துகடன்
பெயரொன் றேபெற லஞ்சுவர் பெருந்தகை நீரார்.
 
"உயிர் ஒன்றே உடையீர் என, உயிர் உணும் கூற்றாம்
செயிர் ஒன்றே முழுது ஒருவுமின். வித்திய செயிரே
துயர் ஒன்றே விளைத்து அடும் எனச் சூழ்ந்துளி, துகள் தன்
பெயர் ஒன்றே பெறல் அஞ்சுவர் பெருந் தகை நீரார்.

     "ஒவ்வொருவரும் ஓர் உயிரையே கொண்டிருக்கின்றீர் என அறிந்து,
அவ்வுயிரை உண்ணும் கூற்றுவனாகிய பாவம் ஒன்றையே முழுதும்
விலக்குங்கள். விதைத்த பாவமே தப்பாமல் துன்பம் விளைவித்து
அவ்வுயிரைக் கொல்லும் என்று ஆராய்ந்து கண்டவிடத்து, பெருந்தகைமை
உடையோர் அப் பாவத்தின் பெயர் ஒன்றைப் பெறுவதற்குமே அஞ்சுவர்.

     'சூழ்ந்துளி' உளி விகுதி பெற்ற வினையெச்சம்.

 
                      100
அண்ட மீவரை நெற்றியிற் பனியிலை யறமே
மண்ட வாழ்பவர் மருளவோர் கேடிலை யன்னா
ருண்ட நஞ்சுமவ் வுயிர்க்கமு தாகிமற் றமிர்தங்
கொண்ட தீயவர்க் கஃதுயிர் கொலுவிட மாமால்.
 

"அண்டம் மீ வரை நெற்றியில் பனி இலை. அறமே
மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை. அன்னார்
உண்ட நஞ்சும் அவ் உயிர்க்கு அமுது ஆகி, மற்று அமிர்தம்
கொண்ட தீயவர்க்கு அஃது உயிர் கொலும் விடம் ஆம் ஆல்.

     "மேக மண்டலம் கடந்து உயர்ந்த மலையின் உச்சியில் பனி படிவது
இல்லை. அறமே பெருக வாழ்பவர் அஞ்சத்தக்க கேடு ஒன்றும் இல்லை.