பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 448

பயன்களே விளைவதைக் காண்பர். தீமைகளைச் செய்தவர் தீயவர்
எனப்படுவர். மயங்காமல், தீயவற்றைத் தாங்கிக் கொள்பவர் தேவருக்கு
ஒப்பானவர் எனப்படுவர்.

 
                     103
அடுஞ்செந் தீயினு மட்டகின் மணமினி தன்றோ
சுடுஞ்செந் தீயினுஞ் சுட்டொளிர் நிதியினி தன்றோ
கொடுஞ்செந் தீயெனக் கொதித்தின்னா வாக்கலி னினிதாம்
படுஞ்செந் தீயெனப் பாசறை படுவதே யென்றான்.
 

"அடும் செந் தீயினும், அட்ட அகில் மணம் இனிது அன்றோ?
சுடும் செந் தீயினும், சுட்டு ஒளிர் நிதி இனிது அன்றோ?
கொடுஞ் செந் தீ எனக் கொதித்து இன்னா ஆக்கலின், இனிது ஆம்
படும் செந் தீ எனப் பாசறை படுவதே" என்றான்.


     "கொல்லும் செந்நிற நெருப்பைக் காட்டிலும், அதனில் சுடப்பட்ட
அகிற்கட்டையின் மணம் இனிது அன்றோ? சுடும் செந்தீயைக் காட்டிலும்,
அதனிற் சுடப்பட்டு ஒளிரும் பொன் இனிது அன்றோ? கொடிய செந்தீ
போலக் கொதித்துப் பிறருக்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும், நீரால்
அவிக்கப்படும் செந்தீயைப் போலப் பிறர் செய்த துன்பத்தை அனுபவிப்பதே
இனியதாகும்" என்று சூசை முடித்தான்.

     'அட்டகில்' என்பது தொகுத்தல் விகாரம்.

 
                        104
இனைய சாற்றலு மெரிநெஞ்சான் வியப்புற நினைத்த
தனைய கேட்டலு மயர்ந்தபின் றீயவர் தீய
புனைய வாக்கலே புண்ணிய மென்றுளம் புழுங்கி
முனைய வோதினான் முனிவனு மீண்டிவை மொழிந்தான்.
 
இனைய சாற்றலும், எரி நெஞ்சான் வியப்பு உற, நினைத்தது
அனைய கேட்டலும் அயர்ந்த பின், "தீயவர் தீய
புனைய ஆக்கலே புண்ணியம்!" என்று உளம் புழுங்கி
முனைய ஓதினான். முனிவனும் மீண்டு இவை மொழிந்தான்:

     இவற்றைச் சூசை சொல்லவும், சினந்த நெஞ்சினனாகிய நாவகன், தான்
நினைத்ததையே அவனும் கூறக் கேட்டதும் வியப்படைந்து அயர்ந்து
போனான். பின், "தீயவர் தீமை அடையுமாறு செய்தலே புண்ணியம்!" என்று
மனம் புழுங்கி வெறுப்போடு கூறினான். சூசை முனிவன் மீண்டும் பின்வரும்
இவற்றைக் கூறலானான்: