| 105 |
மெய்நி னைந்துபொய்
விளைத்தெழு தியபடம் போல
மைவ ளர்ந்துள வஞ்சகர் மெய்யொன்றை யூன்றிப்
பொய்வி ளைந்தசொற் பொருந்தியுட் கொள்வதும் வேண்டா
மொய்ம லிந்துளி முழுதொன்னா ரிறைஞ்சிய வேலோய். |
| |
"மெய் நினைந்து,
பொய் விளைத்து எழுதிய படம் போல,
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றிப்
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம்,
மொய் மலிந்துளி முழுது ஒன்னார் இறைஞ்சிய வேலோய்! |
"போர்
மிகுந்த இடத்துப் பகைவர் முற்றிலும் வணங்கிப் பணியும்
வேலை உடையவனே, ஓவியர் மெய்த் தோற்றத்தை நினைவிற் கொண்டு,
பொய்த் தோற்றத்தைப் படமாக எழுதிக் காட்டுவர். அது போல, மனத்தில்
மயக்கம் மிகுந்துள்ள வஞ்சகர் ஏதேனும் ஒரு மெய்யைப் பற்றி நின்று பொய்
கலந்த சொல்லைச் சொல்லுவர். அதனைச் சான்றோர் சொல்லென்று
பொருந்தி மனத்துட் கொள்ளுதல் வேண்டாம்.
| 106 |
நிலத்தின்
றன்மையா னீர்திரிந் தனையபற் றுளந்தன்
புலத்தின் றன்மையாற் புறத்தவை தோன்றலா லன்பி
னலத்தின் றன்மையாற் றீயவு நல்லவாம் பகைகொள்
சலத்தின் றன்மையா னல்லவுந் தீயவாஞ் சகத்தே. |
| |
"நிலத்தின்
தன்மையால் நீர் திரிந்து அனைய, பற்று உளம் தன்
புலத்தின் தன்மையால் புறந்து அவை தோன்றலால், அன்பின்
நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம்; பகை கொள்
சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே. |
"நிலத்தின்
தன்மையால் நீர் நிறம் மாறித் தோன்றும். அது போலவே,
பற்றுக் கொண்ட உள்ளம் தன் அறிவினுள் உணர்ந்த தன்மை போல்
அவற்றைப் புறத்தே தோன்றக் காட்டும். உலகத்தில் ஒருவன்மேல் அன்பு
என்னும் நலத்தின் தன்மையால் தீயனவும் நல்லனவாக மாறி விடும்; பகை
கொண்ட பொய்யுணர்வின் தன்மையால் நல்லனவும் தீயனவாக மாறி விடும்.
|