பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 450

     விருப்பு வெறுப்பற்று நோக்குவார்க்கே நன்மை தீமையின் உன்மை
புலப்படு மென்பது கருத்து. 'நிலத்தியல் பால் நீர்திரிந்தற்றாகும்' ... என்ற
குறள் (452) மணம் கமழ்வதைக் காண்க.

 
                   107
கட்பு றத்தெழில் காட்டிய காஞ்சிர மினிதோ
முட்பு றத்திலுண் முதிர்சுவைச் சுளைப்பலா வினிதோ
விட்பு றத்தெரி மின்னொளி விரும்பில னாகி
யுட்பு றத்துநல் லவையுமல் லவையுமென் றுணர்வாய்.
 
"கண் புறத்து எழில் காட்டிய காஞ்சிரம் இனிதோ?
முள் புறத்தில் உள் முதிர் சுவைச் சுளைப் பலா இனிதோ?
விண் புறத்து எரி மின்னொளி விரும்பிலன் ஆகி,
உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய்.

     "வெளியே கண்ணுக்கு அழகைக் காட்டி நின்ற எட்டிப் பழம்
இனிதோ? அல்லது, வெளியே முள்ளும் உள்ளே முதிர்ந்த சுவையுள்ள
சுளையும் கொண்ட பலாப்பழம் இனியதோ? எனவே, மேகத்தின் புறத்தே
ஒளியைக் காட்டி மறையும் மின்னலை விரும்பாதவனாய், எவற்றையும்
உட்புறத்து நோக்கி, இவை நல்லவை என்றும், அவை அல்லவை என்றும்
அறிந்து கொள்வாயாக.

 
                   108
செய்த தீமையே செய்தவர் மேல்வருந் தன்மை
பொய்த காதெனப் பொன்மணி வீங்கிய தோளா
யெய்த வோர்ந்தவை யிழுக்கென விடுதியென் றுரைத்தான்
மைத காமறை வளர்கொழு கொம்பனை நீரான்.
 
"செய்த தீமையே செய்தவர் மேல் வரும் தன்மை
பொய் தகாது என, பொன் மணி வீங்கிய தோளாய்,
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி" என்று உரைத்தான்,
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனைநீரான்.

     "பொன்னும் மணியும், அணிந்து திரண்ட தோள்களை உடையவனே,
செய்த தீமை செய்தவர் மேலேயே வந்து சேரும் என்ற தன்மை
பொய்யாகாது என்று உணர்ந்து, நீ செய்து முடிக்கக் கருதியவற்றை இழிவு
தருவன என்று உணர்ந்து விட்டொழிப்பாய்" என்று, குற்றமே பொருந்துதல்
இல்லாத வேதம் என்னும் கொடி படர்ந்து வளர்வதற்குக் கொழுகொம்பு
போன்ற தன்மையுள்ள சூசை உரைத்து முடித்தான்.