பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 453

வேலை உடைய நாவகன் அதனை நோக்கித் தன் செயலுக்கு நொந்தான்;
குளிர்ந்த கதிரை உடைய மதிக்குப் பகையாகிய தாமரை மலரையும் வென்ற
சூசையின் முகத்தில் தோன்றிய ஒளியால் உள்ளம் தெளிந்து தேறினான்;
துன்பக் கதிரின் தாக்குதல் ஒழியுமாறு சூசையின் இரு அடிகளையும்
தொழுது வீழ்ந்து பின்வருமாறு சொன்னான்:

     'நோக்கி நொந்து' எனவும், 'வில்லாம் உளம் தெளிய' எனவும்
பிரித்துக் கூட்டுக.

 
              112
துய்ப்பட வினிய சொல்லாற்
     சுட்டிய வுணர்வி றேற்றேன்
பொய்ப்பட வுரைக்கின் றோரும்
     பொருந்துநூ லெளிய சொல்வார்
மைப்பட விவணான் செய்த
     வடுவினைப் பொறுத்த சால்பே
மெய்ப்பட வுரைத்த வேத
     விதியெனத் தெளியக் கண்டேன்.
 
"துய்ப் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன்.
பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார்
மைப்பட இவண் நான் செய்த வடுவினைப் பொறுத்த சால்பே
மெய்ப்பட உரைத்த வேத விதி எனத் தெளியக் கண்டேன்.

     "பொய்யோடு பொருந்தச் சொல்வோரும் பொருந்திய அறிவு நூலை
எளிதாக எடுத்துச் சொல்வர். எனவே, நுட்பம் பொருந்த இனிய சொல்லால்
நீ சுட்டிக் காட்டிய அறிவுரையைக் கொண்டு நான் மனத்தில் தெளிவு
பெறவில்லை. ஆனால், குற்றம் பொருந்த நான் இங்கே உனக்குச் செய்த
பிழையை நீ பொறுத்துக் கொண்ட பண்பு மேம்பாடுதான் நீ மெய்யோடு
பொருந்தக் கூறிய வேதத்தின் சிறப்புக்குரிய விதிமுறை என்று தெளிவாகக்
கண்டு கொண்டேன்.