பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 458

சேர்ந்து ஒன்றுமாறு தழுவிக் கொண்டான். அன்று அங்குக் கூடியிருந்த
யாவரும் இவற்றைக் கண்டு, தம்முள் வியந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

 
                  119
தெளிவள ரழலிட் டூதிச்
     செற்றிரும் பிரதப் பாலா
லொளிவளர் பசும்பொன் னாத
     லுண்டென வுரையிற் கேட்டே
மிளிவளர் கொடிய நீரா
     னின்றுநற் பொறையின் பாலாற்
களிவளர் தரும னாதல்
     கண்டது தெளிந்தோ மென்றார்.
 
"தெளி வளர் அழல் இட்டு ஊதிச் செற்ற இரும்பு, இரதப் பாலால்
ஒளி வளர் பசும் பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம்.
இளி வளர் கொடிய நீரான் இன்று, நற்பொறையின் பாலால்,
களி வளர் தருமன் ஆதல் கண்டு, அது தெளிந்தோம்" என்றார

     கூடியிருந்தோர் மகிழ்ச்சி கொண்டு, "தெளிந்து வளர்கின்ற
நெருப்பிலிட்டு ஊதிப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு, இரசவாதத் தன்மையால்
ஒளி வளர்கின்ற பசும்பொன்னாக மாறுதல் உண்டென்று சொல்லக்
கேட்டிருக்கின்றோம். இன்று, இழிவு பெருகிய கொடிய இயல்புள்ள இந்
நாவகன், சூசையிடம் கண்ட சிறந்த பொறுமையின் தன்மையால், மகிழ்ச்சியை
வளர்க்கும் அறவாளன் ஆதலைக் கண்டு, மேலே கூறிய அதுவும் நடக்கலாமென்று தெளிந்தோம்" என்றனர்.

     'செற்றிரும்பு' என நின்றது தொகுத்தல் விகாரம்.

 
             120
தொல்வினை யென்னுஞ் சூலாற்
     றொடர்வினை தளிர்த்து விம்மும்
புல்வினை புல்லா நோற்ற
     புலமையோ னொருவன் செய்த