பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 460

     நாவகனின் குடம் போன்ற இருதோள்களிலும் குழைத்துப் பூசிய
சந்தனத்தை நடனம் புரிவது போன்று அசையும் குண்டலங்கள் நக்குவது
போல் தடவி ஒளி பரப்பும். சூசை காட்டிய அருளின் அழகை அவன்
சித்திரப்படம் போல் யாரும் அறியப் பரப்பினன். வேதத்தையே முத்து வடம்
போல் அணிந்துள்ள சூசை அவனுக்குப் பின்வருமாறு கூறலானான்:

 
                     122
நாடலே யருந்தவ நலத்தைக் கண்டுநீ
நீடலே புகழ்வது நீர்மை யோவினி
தாடலே முடவற்கு மினிய தாமன்றோ
கோடலே குணமெனக் குறிப்பிற் றேறுவாய்.
 
"நாடலே அருந் தவ நலத்தைக் கண்டு நீ
நீடலே புகழ்வது நீர்மையோ? இனிது
ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ?
கோடலே குணம் எனக் குறிப்பின் தேறுவாய்.

     "நாடிப் பெறுவதற்கு அரிய தவத்தின் நலத்தைப் பிறர்பால் நீ கண்டு
மிகுதியாகப் புகழ்தல் தக்கதோ? இனிமையாக நடனம் ஆடுதலைக் காண்பது
முடவனுக்கும் இன்பம் தருவது ஆகும் அன்றோ? இக்குறிப்பினின்று,
அத்தவத்தை நீயும் கொண்டு ஒழுகுதலே குணம் என்று தெளிவு பெறுவாய்.

 
                     123
மின்னிழ லெனமிளிர்ந் தொழிவெ றுக்கைசெய்
கொன்னிழல் வெறுத்தறங் கொண்டு நின்றியேல்
நின்னிழ லெனநினை யிறைவ னீங்கிலா
தின்னிழ லியற்றிநீ யினிதில் வாழ்கென்றான்.
 
"மின் நிழல் என மிளிர்ந்து ஒழி வெறுக்கை செய்
கொன் நிழல் வெறுத்து, அறம் கொண்டு நின்றியேல்,
நின் நிழல் என, நினை இறைவன் நீங்கு இலாது
இன் நிழல் இயற்றி, நீ இனிதில் வாழ்க" என்றான்.

     "மின்னலின் ஒளி பொல் சிறுபோது ஒளியுடன் விளங்கிப் பின்
அழிந்து போகக் கூடிய செல்வம் தரும் வீணான புகழை வெறுத்து,
அறத்தைக் கைக்கொண்டு ஒழுகி நிலைப்பாயானால், உன் நிழல் உன்னை