பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 462

      'கழீயின' முதலியன சொல்லிசை அளபெடை. 'இன்' இறந்த கால
இடைநிலை.

 
                  126
வேன்முகத் தொத்தநல் வீர நாவக
னூன்முகத் தொத்தென நோக்கி வாமனுந்
தேன்முகத் தலர்ந்தநெஞ் சுவப்பச் சேர்ந்துதாம்
வான்முத் திருசுடர் மருளத் தோன்றினார்.
 
வேல் முகத்து ஒத்த நல் வீர நாவகன்,
நூல் முகத்து ஒத்து என நோக்கி, வாமனும்
தேன் முகத்து அலர்ந்த நெஞ்சு உவப்பச் சேர்ந்து, தாம்
வான் முகத்து இரு சுடர் மருளத் தோன்றினார்.

     வேல் தொழிலில் தனக்கு ஒத்த நல்ல வீரனாகிய நாவகன், வேத நூல்
வழியிலும் தனக்கு ஒத்தவனாயினான் என்று வாமனும் கண்டு, தேன் உண்டு
மலர்ந்தது போன்று தன் உள்ளம் மகிழ வந்து அவனைச் சேர்ந்தான்.
இருவரும் வானத்தில் உள்ள ஞாயிறு திங்களாகிய இரு சுடர்களோ எனப்
பிறர் மயங்குமாறு விளங்கினர்.

 
               127
கேதகா ரணத்திவை சுரமி கேட்டலி
னாதகா ரிடித்தென நைந்த ரற்றினா
ணீதகா தலின்மிகு நீர நாவகா
ஆதகா திதுவென வகட துக்கினாள்.
 
கேத காரணத்து இவை சுரமி கேட்டலின்,
நாத கார் இடித்தென நைந்து அரற்றினாள்:
"நீத காதலின் மிகு நீர நாவகா,
ஆ, தகாது இது!" என அகடு அதுக்கினாள்.

     தன் துக்கத்திற்கு காரணமாகக் கூடிய இவற்றையெல்லாம் சுரமி
கேட்டு அறிந்தாள்; ஒலி மிக்க கருமேகம் இடித்ததுபோல் மனம் நைந்து
புலம்பினாள்; அங்கு ஒடி வந்து, "ஆ! நீதியின் மீது விருப்பம் மிக்க
தன்மையுள்ள நாவகா, இது தகாது!" என்று கூறித் தன் வயிற்றில் அடித்துக்
கொண்டாள்.