பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 464

               130
தீயவை யுணர்ந்தன டீய வுண்டெரி
போயவை புகழ்ந்தநூற் புதைப்ப வுள்ளிய
வாயவை வளர்மறை வழங்கிற் றாயதே
தூயவை தூயவாய்த் துளங்கும் பீடையால்.
 
தீயவை உணர்ந்தனள் தீய உண்டு எரி
போய், அவை புகழ்ந்த நூல் புதைப்ப உள்ளிய
வாய் அவை வளர்மறை வழங்கிற்று ஆயதே
தூயவை தூயவாய்த் துளங்கும் பீடையால்.

     தீயவற்றைச் செய்யக் கருதியவள் இவ்வாறு தீய பயன்களை
அடைந்து நரக நெருப்பில் போய்ச் சேர்ந்தாள். அறிவுடையார் சபை
புகழ்ந்த வேத நூலை மறைப்பதற்கென்று அவள் கருதிய வழியால் சபையாக
வளர்ந்து அவ்வேதம் வழங்குவதற்கு உதவியாற்று. எனவே, தூயவை
துன்பத்தால் மேலும் தூய்மை பெற்று விளங்கும்.

     நாடகத்து இறுதிக் காட்சி போல், இக்காதையோடு தொடர்புள்ள
யாவரையும் முனிவர் இப்பகுதியில் திரட்டிக் கொணர்ந்து காட்டும் திறம்
இன்பம் பயப்பதாகும்.

               வேதக் கெழுமைப் படலம் முற்றும்

               ஆகப் படலம் 29க்கு விருத்தம் 2940.