பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 465

முப்பதாவது
 

மீட்சிப் படலம்
 

     திருக்குடும்பத்தினர் எசித்து நாட்டினின்று சூதேய நாட்டிற்கு
மீண்டதைக் கூறும் பகுதி.

                       மீளுதற்கு ஆணை

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                1
ஏழ்பட வருட மிவ்வா
     றியல்பட வொழுகிற் றாகிப்
போழ்படக் கல்லுஞ் செந்தீப்
     புழுங்கிய வனம்போற் பாவத்
தாழ்பட வழன்ற வந்நா
     டாரண வருவி பாயக்
கேழ்பட மலர்ந்த சோலைக்
     கிழமையி னெழுவிற் றன்றோ.
 
ஏழ்பட வருடம் இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி,
போழ் படக் கல்லும் செந்தீப் புழுங்கிய வனம் போல், பாவத்து
ஆழ் பட அழன்ற அந்நாடு, ஆரண அருவி பாய,
கேழ் பட மலர்ந்த சோலைக் கிழமையின் எழுவிற்று அன்றோ.


     இவ்வாறு ஏழு ஆண்டுகள் நலத்தோடு நடந்து முடிந்தன.
அக்காலமெல்லாம், கல்லும் பிளக்கச் செந்தீயினால் கொதித்த வனம் போல்,
பாவத்தில் ஆழ்ந்து கிடந்து வெம்பிய அவ்வெசித்து நாடு, வேதம் என்னும்
அருவி பாய்தலால், நிறமுள்ள பூக்கள் மலர்ந்த பொழிலின் தன்மையாய்
எழுச்சி பெற்றது.