பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 468

     கொழுமையான தவத்தைக் கொண்ட சூசை அத் தெய்வ மகனின்
மார்பில் நெருக்கமாய்ப் பழகி, மகிழ்ச்சியில் மூழ்கி உண்ட ஞானத்தைத்
திரும்பவும் உராய்ந்து உமிழ்வதுபோல், யாவர்க்கும் பெரும் பயன்
விளையுமாறு, சிறப்பாக ஆராய்ந்து தன் தேன் போன்ற மொழி பேசும்
வாயால் நாள்தோறும் எடுத்துக் கூறினான். அதனால், நல்லியல்பு பொருந்தி
எழுச்சி பெற்ற அவ்வெசித்து நாடு, அம்மம்மா! தனக்க நிகர் எந்நாடும்
இல்லை என்னுமாறு ஒளியுடன் விளங்கியது.

     'அம்மா' வியப்பு உணர்த்தும் இடைச் சொல். தேன் + மொழி
-தேமொழி.

 
                  5
வினைப்பகை யொழிந்த யாரு
     மெய்ம்மறை விளைவு காண
வெனைப்பக றோறும் வீயா
     வின்பமுற் றுவந்த போழ்திற்
சுனைப்பகைக் கோடை முற்றித்
     துதைந்தபைங் கூழ்காய்ந் தன்ன
முனைப்பகைத் தன்மைத் தன்னார்
     முரியவுற் றதுசொல் வாமால்.
 
வினைப் பகை ஒழிந்த யாரும் மெய்ம் மறை விளைவு காண,
எனைப் பகல் தோறும் வீயா இன்பம் உற்று உவந்த போழ்தில்,
சுனைப் பகைக் கோடைமுற்றி, துதைந்த பைங்கூழ் காய்ந்து அன்ன,
முனைப் பகைத் தன்மைத்து, அன்னார் முரிய உற்றது சொல்வாம் ஆல்.

     சூசையின் வாய்மொழியால் பாவச் செயலாகிய பகை நீங்கிய யாவரும்
மெய் வேதத்தால் விளைந்த பயனைக் கண்டு கொண்டனர்; எத்தனையோ
நாட் கணக்கில் கெடாத இன்பம் அடைந்து மகிழ்ந்தனர். அப்பொழுது
தடாகங்களுக்குப் பகையாகிய கோடை முதிர்ந்து, நெருங்கி வளர்ந்த பயிர்
காய்ந்தது போன்று, போர் முனையிற் கண்ட பகைவரின் தன்மையாக,
அவர்கள் மனம் முறியுமாறு நிகழ்ந்ததை மேலே சொல்வோம்.