|
"மணம்
கமழும் இளம் முல்லைக் கொடியை நட்டு, பொன்னால் வேலி
வளைத்து, வானினின்று பொழியும் பனி போன்ற மாலையால் பந்தல்
அமைத்து, முத்துக்களை அடியில் மணலாகப் பரப்பி, தேனையே சுரக்கும்
நீராக ஊட்டி வளர்த்த வேதம் என்னும் பூஞ்சோலை தீய்ந்து அழியவோ
விண்மீன்கள் ஒளி வீசும் இரவு வேளையில் எம்மை விட்டுப் போவீர்கள்?"
என்றும் புலம்புவர்.
| 16 |
தாளெழுந்த
கஞ்சமெஞ்சக்
கதிர்போய் நாளைத் தானுவப்பக்
கோளெழுந்த தேரெழுமே
நீர்போய் நெஞ்சங் குடைந்தழுந்தும்
வாளெழுந்த புழைபுழுங்கும்
பெரும்புண் ணாறி மகிழ்வதற்கெந்
நாளெழுந்த நுமைக் காணக்
கடவே மந்தோ நாமென்பார். |
| |
|
'தாள் எழுந்த
கஞ்சம் எஞ்சக் கதிர் போய், நாளை தான் உவப்பக்
கோள் எழுந்த தேர் எழுமே; நீர் போய் நெஞ்சம் குடைந்து அழுந்தும்
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு, எந்
நாள் எழுந்த நுமைக் காணக் கடவேம், அந்தோ, நாம்!" என்பார்.
|
"தண்டில்
எழுந்த தாமரை மலர் வாடுமாறு பகலவன் இன்று மறைந்து
போய், நாளை அத்தாமரை மகிழுமாறு கிரகங்களால் அமைந்த தேரில்
எழுந்து வருமே; நீங்கள் போயினமையால் நெஞ்சத்தைக் குடைந்து
அழுந்திய வாளால் உண்டான துளையால் புழுங்கும் பெரிய புண் ஆறி
மகிழ்வதற்கு, மீண்டும் எழுந்து வந்த உங்களை இங்கு நாங்கள் எந்நாள்
காணப் பெறுவோம்? ஐயோ!" என்றும் புலம்புவர்.
'நாம்'
இங்கு முன்னிலையை உளப்படுத்தாத தன்மைப்
பன்மையாகும்.
|