பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 477

                17
அன்புகுக்குங் கண்ணீரே
     யன்பிற் காற்றாப் பெருந்தளையென்
றின்புகுக்கு மோரிருசொற்
     கூறா தந்தோ விராவொளித்தீர்
துன்புகுக்குங் கான்றுறுங்காற்
     றுணையின் மஞ்ஞைத் துயர்கண்டு
நன்புகுக்கு நெஞ்சுருகி
     யிரங்கீர் கொல்லோ நமக்கென்பார்.
 
"அன்பு உகுக்கும் கண்ணீரே அன்பிற்கு ஆற்றாப் பெருந்தளை என்று,
இன்பு உகுக்கும் ஓர் இரு சொல் கூறாது, அந்தோ, இராவு ஒளித்தீர்.
துன்பு உகுக்கும் கான் துறும் கால், துணை இல் மஞ்ஞைத் துயர் கண்டு,
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி, இரங்கீர் கொல்லோ நமக்கு!" என்பார்.

     "அன்பைச் சொரியும் பிறர் கண்ணீரே அன்பிற்குத் தாங்காத பெரிய
விலங்காகும் என்று கருதி, இன்பத்தைப் பொழியும் ஒன்றிரண்டு சொல்லும்
கூறாமல், ஐயோ! இரவோடு ஒளித்துச் சென்று விட்டீர்கள். துன்பத்தைச்
சொரியும் காட்டை நெருங்கும்போது, தன் துணையை இழந்த மயில்
அடையும் துயரத்தைக்கண்டு, நன்மை பொழியும் நெஞ்சம் உருகி, எமக்காக
இரங்க மாட்டீரோ?" என்றும் அழுவர்.

     'நமக்கு' என்பது எமக்கு என்று பொருளில் வந்தது.

 
                18
கூண்டுண்டாங் குஞ்சகலா
     தோம்பும் பற்புட் குலமுங்கார்
கீண்டுண்டா மிடிக்கஞ்சும்
     பிடியைத் தாங்குங் கெழுங்கரியு
மாண்டுண்டாங் கான்றுறுங்காற்
     காண்பீர் காண்கி லாதரவற்
றீண்டுண்டா நமைநினைமி
     னென்பார் ஆஅ தகாதென்பார்.