பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 479

கிடந்த அந்நகரை விட்டு, கூட்டமாகத் திரண்டு, தம்மைப் பிரிந்து சென்ற
மூவரையும் பின் தொடர்ந்து சென்றனர்.

                  சோலையில் ஓலம்

     - மாங்கனி, கூவிளம், கூவிளங்காய்

 
                20
தேனார்தெளி யார்திரு வார்மொழியார்
போனாருயிர் பின்னுடல் போவதெனக்
கானார்வழி போவமெ னக்கடலும்
வானார்கன முங்கலி மங்குவன.
 
"தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார்
போனார். உயிர் பின் உடல் போவது என,
கான் ஆர் வழி போவம்" என, கடலும்
வான் ஆர் கனமும் கலி மங்குவன.

     தொடர்ந்து சென்ற இரவிமாபுரத்தார், "தேனும் தெளிவும்
அருட்செல்வமும் நிறைந்த மொழி பேசும் மூவரும் நம்மைப் பிரிந்து
போயினர். உயிரைப் பின் தொடர்ந்து உடல் போவது போல், காடு செறிந்த
வழியில் நாமும் போவோம்" என்றனர். கடலின் ஒலியும் வானத்திலுள்ள
மேகத்தின் ஒலியும் இவர்கள் அழுகை ஒலியின்முன் மங்கிப் போவன ஆம்.

 
                21
மிக்கார்துயர் கண்டன மேன்மையிலார்
நக்காரென முல்லைக ணக்கலரப்
புக்கார்பொழில் தோகைம யிற்புடையிற்
றொக்காரனை யத்துய ராலுவன.
 
மிக்கார் துயர் கண்டு, அன மேன்மை இலார்
நக்கார் என, முல்லைகள் நக்கு அலரப்
புக்கார் பொழில். தோகை மயில் புடையில்
தொக்கார் அனை அத்துயர் ஆலுவன.

     மேன்மை மிக்கவர் துயரத்தைக் கண்டு, அத்தகைய மேன்மை
இல்லாதவர் எள்ளி நகைத்தாற் போல, முல்லைக்கொடிகள் சிரித்து