பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 480

மலர அவர்கள் சோலையுள் புகுந்தனர். அப்பொழுது தோகையை உடைய
மயில்கள் புடைசூழ வந்து, உறவினர் போன்று அத்துயரைக் கண்டு தாமும்
அழுதாற் போல் குரல் காட்டும்.

 
               22
பயிலுண்டந ரம்பிள கும்பரிசின்
மயிலும்மக வச்சிறை வண்டுமழ
வயிலுந்துய ராய்ந்துத காததெனக்
குயிலுங்குயில் கின்றுகு ரங்குவன.
 
பயில் உண்ட நரம்பு இளகும் பரிசின்,
மயிலும் அகவ, சிறை வண்டும் அழ,
அயிலும் துயர் ஆய்ந்து, தகாதது என,
குயிலும் குயில்கின்று குரங்குவன.

     பழக்கப்பட்ட யாழ் நரம்பு இளகி மாறுபட ஒலிக்கும் தன்மை போல்,
மயிலும் கூப்பிட, சிறகுள்ள வண்டும் அழ, அம்மக்கள் அனுபவிக்கும்
துயரத்தை ஆராய்ந்து, 'இது தகாது' என்பன போல், குயில்களும்
கூவுகின்றவனவாய் இரங்கும்.

     மயிலும் வண்டும் குயிலும் தன் இயற்கையான குரல் மாறித் துன்பக்
குரல் காட்டின என்பது கருத்து.

 
                       23
"மயில்காளளி காள்வரி காள்சிவல்காள்
குயில்காள்கிளி காள்கொடி காளுரையீ
ரெயில்காளவ னத்திணை யெஞ்சநலோர்
வெயில்காளம றைந்தென மேவிடமே.
 
"மயில்காள், அளிகாள், வரிகாள், சிவல்காள்,
குயில்காள், கிளிகாள், கொடிகாள், உரையீர்,
எயில் காள வனத்து இணை எஞ்ச, நலோர்
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே.

     இருவிமாபுரத்தார் இவ்வாறெல்லாம் இரங்கிப் புலம்புகின்றனர்:
"மயில்களே, வண்டுகளே, வரிவண்டுகளே, கௌதாரிகளே; குயில்களே
கிளிகளே, காக்கைகளே, எமது ஊர் சுடுகாட்டிற்கு ஒப்பாக மெலியும்படி,
கதிரவன் மேகத்திற்குள் மறைந்தது போல், அந்த நல்லோர் மூவரும்
சேர்ந்துள்ள இடத்தை நீங்களேனும் சொல்லுங்கள்.