பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 482

                       26
விண்டார்மது விள்ளிய பூம்பொழில்போய்த்
தண்டார்தகை நேர்தயை தாங்கியமார்
புண்டாரவர் போமுழி யோவிதெனக்
கண்டார்கம லக்கழ லஞ்சுவடே.
 
விண்டார் மது விள்ளிய பூம் பொழில் போய்,
'தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு
உண்டார் அவர் போம் உழியோ இது?' என,
கண்டார் கமலக் கழல் அம் சுவடே.

     தேடித் தேடிக் காணாமல் மனம் விட்டுப்போன அவர்கள் மதுவைப்
பொழிந்த பூஞ்சோலைக்குள் சென்றனர்; 'குளிர்ந்த மாலையின் அழகிற்கு
நிகராகத் தயவு தாங்கிய மார்பை உடைய அவர்கள் போகும் இடம்
இதுவாக இருக்குமோ' என்று? அங்கும் தேடினர்; தேடி, மூவர்தம் தாமரை
மலர் போன்ற அழகிய அடிச் சுவடுகளை அங்கே கண்டனர்.

     'கழல்' கழல் அணிந்த அடிகளுக்கு ஆகுபெயர். இங்கு வெறுமனே
'அடி' என்ற சொல்லின் மாற்றுருவமாக நின்றது.

 
                    27
எல்லோவிது வோவுடு வோவிவையோர்
வில்லோடுறு மோர்நகை யோவிரிநூற்
சொல்லோடடை யாச்சுடர் செய்சிறுவன்
புல்லோரடி போஞ்சுவ டேயிதென்பார்.
 
"எல்லோ, விதுவோ, உடுவோ இவை? ஓர்
வில்லோடு உறும் ஓர் நகையோ? விரி நூல்
சொல்லோடு அடையாச் சுடர் செய் சிறுவன்
புல் ஓர் அடி போம் சுவடே. இது!" என்பார்.

     அவர்கள் சுவடு கண்டு, "இவை ஞாயிறும் திங்களும் விண்மீனுமோ?
இவை மூன்றும் ஓர் ஒளியாகச் சேர்ந்து பொருந்தும் ஓர் அணிகலனோ?
இம்மூன்றினுள், விரிந்த நூல்களிற் பரந்து கிடக்கும் சொல்லால் அடைய
முடியாத ஒளியைத் தரும் அச்சிறுவனது மெல்லியதோர் அடி நடந்து
போகும் சுவடே இது!" என்பர்.