பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 483

                    28
உண்மைச்சுரு திக்கொழு கொம்புருவாள்
பெண்மைப்பெரி தாயவி ளக்கனையாள்
தண்மைக்கன நேர்தயை யாளவள்போய்
மண்வைத்தன மன்னடி யேயிதென்பார்.
 
"உண்மைச் சுருதிக் கொழு கொம்பு உருவாள்,
பெண்மைப் பெரிது ஆய விளக்கு அனையாள்,
தண்மைக் கனம் நேர் தயையாள் - அவள் போய்,
மண் வைத்தன மன் அடியே இது?" என்பார்.

     மெய் வேதத்திற்குக் கொழு கொம்பு போன்ற உருவம் உடையவள்,
பெண்மைக்குப் பெரிய விளக்குப் போன்றவள், குளிர்ந்த மேகம் போன்ற
தயவு உடையவள் - அம்மரியாள் நடந்து போகையில், மண்ணிற் பதிய
வைத்த நிலையுள்ள அடியின் தடமே இது!" என்பர்.

     "பெண்ணிற் பெருந்தக்க யாஉள கற்பென்னும், திண்மை யுண்டாகப்
பெறின்," என்ற குறளின்படி (54), 'பெரிது' என்றது கற்பு எனக் கொள்க.

 
               29
அருள்வீங்கிய மார்பணி யீரறனே
தெருள்வீங்கிய நூற்றுறை யேதிருநூற்
பொருள்வீங்கிய போதக னேகிமலர்ச்
சுருள்வீங்கிய காற்சுவ டேயிதென்பார்.
 

"அருள் வீங்கிய மார்பு அணி ஈர் அறனே,
தெருள் வீங்கிய நூல் துறையே, திரு நூல்
பொருள் வீங்கிய போதகன் ஏகி, மலர்ச்
சுருள் வீங்கிய கால் சுவடே இது!" என்பார்.


     "இல்லறம் துறவறம் என்னும் ஈரறமும் ஓரறமாகத் தன் அருள்
பெருகிய மார்புக்கு அணியாகக் கொண்டவனும், தெளிவு மிகுந்த நூல்கள்
என்னும் கடலுக்குக் கரை போன்றவனும், திவ்விய வேதப் பொருள் பெருகக்
கொண்ட போதகனுமாகிய சூசை நடந்து போகையில், தாமரை மலரின் இதழ்
போன்ற கால் பதிந்த சுவடே இது!" என்பர்.

     "பூவெனப் படுவது பொறிவாழ் பூவே" எனப்படுதலின், 'மலர்' தாமரை
மலர் என்க. அறன் - 'அறம்' என்பதன் கடைப்போலி.