பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 484

                  30
அடிகாணுளி யாருயிர் கண்டதெனக்
கொடிகான்மல ருங்குளிர் கொம்பருயர்
முடிகான்மல ரும்முளி நீர்மலருங்
கடிகான்மல ரங்கழல் மேலணிவார்.
 
அடிகாண் உளி ஆருயிர் கண்டது என,
கொடிகான் மலரும், குளிர் கொம்பர் உயர்
முடிகான் மலரும், முளி நீர் மலரும்,
கடிகால் மலர் அம் கழல் மேல் அணிவார்.

     அவர்கள் அம்மூவரின் அடித்தடத்தைக் கண்ட போது தங்கள்
அருமையான உயிரைக் கண்டது போலவே மகிழ்ந்து, கொடியில் பூத்த
நறுமண மலரும், குளிர்ந்த கொம்பின் உயர்ந்த உச்சியில் பூத்த நறுமண
மலரும், தடாகத்து நீரில் பூத்த மலரும் பறித்து வந்து, மணம் உமிழ்கின்ற
தாமரை மலர் போன்ற கால் தடத்தின் மேல் அணிவார்கள்.

     ஆருயிர் - அருமை + உயிர். கொம்பர் - 'கொம்பு' என்பதன்
கடைப்போலி. 'மலர்' விளக்கம் முன் பாடலிலும், 'கழல்' விளக்கம் 26-ம்
பாடலிலும் காண்க. 'கழல்' முதலிற் அடிக்கும், பின் தடத்திற்குமாக
இருமடியாகு பெயர்.

 
              31
பூக்காவல னாயபொ லந்தவனே
நீக்காதுனை நேடிய வெந்தொடர்பைத்
தூக்காமையி னோதொட ராமையினோ
நோக்காதெமை நூக்குபு போதியென்பார்.
 
"பூக்காவலன் ஆய பொலம் தவனே,
நீக்காது உனை நேடிய எம் தொடர்பைத்
தூக்காமையினோ, தொடராமையினோ,
நோக்காது எமை நூக்குபு போதி?" என்பார்.

     அவர்கள். "இப்பூவுலகிற்குக் காவலனாகிய பொன் போன்ற தவ
முனிவனே, விடாமல் உன்னைத் தேடிய எங்கள் உறவை ஆராய்ந்து
பாராததனாலோ, எங்களோடு உண்மையாக உறவு கொள்ளாததனாலோ,
எங்களை நோக்காமல் இவ்வாறு தள்ளி விட்டுப் போவாய்?" என்று புலம்புவர்.