பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 485

                      32
இனியாருயிர் தேற்றுவ ரீர்த்துயிர்கொல்
துனியார்புரி வோர்ந்துது டைத்திடுவார்
தனியார்வினை வென்றுத கைபெறுவார்
கனியாருமிந் நாடெரி காயுமென்பார்.
 
"இனி யார் உயிர் தேற்றுவர்? ஈர்த்து உயிர் கொல்
துனி யார் புரிவு ஒர்ந்து துடைத்திடுவார்?
தனி யார் வினை வென்று தகை பெறுவார்?
கனி ஆரும் இந்நாடு எரி காயும்!" என்பார்.

     "இனி யார் உங்கள் உயிரைத் தேற்றுவர்? உயிரை அரிந்து
கொல்லும் துன்பத்தை யார் அன்போடு உணர்ந்து துடைத்திடுவார்?
உன்துணையில்லாமல் தனியே யார் பாவ வினையை வென்று மாண்பு
பெறுவார்? கனிகள் நிறைந்துள்ள இந்நாடு இனிமேல் நெருப்பால் வேகும்!"
என்றும் புலம்புவர்.

 
                   33
திரைபோலிடர் வந்துதி ரண்டனகால்
வரைபோன்மினி ரென்றுவ குத்தனையே
நுரைபோலுயிர் பொங்கநு கர்ந்தவழற்
கிரைபோலுரு குங்கலு மென்றயர்வார்.
 
"திரை போல் இடர் வந்து திரண்டன கால்,
வரை போன்மினிர் என்று வகுத்தனையே;
நுரை போல் உயிர் பொங்க நுகர்ந்த அழற்கு
இரை போல் உருகும் கலும்!" என்று அயர்வார்.

     "ஆறு போல் துன்பம் வந்து திரண்ட காலத்தும், மலை போல்
தளராதிருங்கள் என்று வகுத்துச் சொன்னாயே; நுரை போல் உயிர்
பொங்குமாறு நாங்கள் நுகர்ந்த இப்பிரிவாகிய நெருப்பிற்கு இரை போல்
கல்லும் உருகும்!" என்று சோர்வர்.

 
                   34
அயர்வாருரு மேற்றின ரற்றினராய்ந்
துயர்வாரிரு கண்மழை தூவியழ
மயர்வார்மெலி வார்மன மோங்கியபின்
பெயர்வார்நசை யுட் பெய ராத்தொடர்வார்.