பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 488

     தேன் கொண்டு மலர்ந்த பூங்கோலை உடைய சூசை இக்காட்சி
கண்டு தெளிந்த உள்ளத்தால் இரங்கினான்; வானுலகில் இலங்கும்
விண்மீனைக் கொடியாகவும் அழகிய மேகத்தை வாகனமாகவும் கொண்டு,
பாலையும் இகழத்தக்க அருள் கொண்ட தெய்வச் சிறுவனை நோக்கி, "ஐயா,
அவர்கள் நம்மை நாடிக் கானகம் வந்தன ரெனின், அவர்களை வருத்தும்
துயரினின்று காப்பாயாக" என்று வேண்டினான்.

 
           38
முச்சக முழுவெண் டிங்கண்
     முக்குடை நிழற்றி யாளு
மெச்சக மனைத்து மேத்து
     மிளவல்செய் யாசி தன்னாற்
கச்சகம் வீக்கி னாற்போற்
     கானெறி யுணாவற் றன்னார்
நச்சக மமிர்த மாக
     நயக்கட லமிழ்ந்தி னாரே.
 
முச்சகம் முழு வெண் திங்கள் முக்குடை நிழற்றி ஆளும்
எச்சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால்,
கச்சகம் வீக்கினாற் போல், கான் நெறி உணர்வு அற்று, அன்னார்
நச்சு அகம் அமிர்தம் ஆக, நயக்கடல் அமிழ்ந்தினாரே.

     வெண்ணிறமான முழு நிலவைப் போன்ற மூன்று குடைகளால் நிழல்
செய்து மூன்று உலகங்களையும் ஆள்பவனும், அனைத்து உலகங்களும்
வணங்குபவனுமாகிய குழந்தை நாதன் அவர்களுக்கு ஆசீர்வாதம்
வழங்கினான். அதனால், அவர்கள் கச்சையாற் கட்டப் பட்டவர் போல,
அக்காட்டு வழியில் தொடர்ந்து செல்லும் உணர்வு நீங்கி, நஞ்சு உள்ளே
சென்று அமிழ்தமாய் மாறியதுபோல், இன்பக் கடலில் ஆழ்ந்தனர்.

     நச்சகம் - நஞ்சு + அகம். மென்றொடர் வன்றொடர் ஆயிற்று.

 
            39
கரையுடைத் தரவுய்த் தோடுங்
     கடற்கரை யிட்ட தேபோற்
புரையுடைத் தவன்செய் யேவல்
     புணர்ந்தநீள் கூல மாகத்