பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 490

     மூவர் பிரிவினால் உள்ளம் காய மெலிந்த நெஞ்சினராகிய இரவி
மாபுரத்தார், அவ்வொளியினால், "கடவுள் திருவுளத்தோடு பொருந்த
வந்தால் தீயனவும் நல்லன ஆகும்; அதனை எதிர்க்கும் பாவத்தின் வழியாக
வந்தால் தூயனவும் தீயன ஆகும் என்று சொல்லி, தம் கருத்தினில் குளிரத்
தேறினர்; உள்ளத்தில் பாய்ந்து நிறைந்த இன்பத்தால், தம் உறைவிடமாகிய
அந்நகருக்கு மீள முடிவெடுத்தனர்.

 
           41
அம்மையே மகவே வாய்ந்த
     வருந்தவத் திறைவ சூசை
நும்மையே யுயிரென்றாக
     நுதலிநுந் நிழலில் வாழ்ந்த
நம்மையே யகன்று போதீர்
     நட்பிடை யகலா தன்பின்
செம்மையே பேண்மி னென்னாச்
     சென்றுமீண் டெவரும் போனார்.
 
"அம்மையே, மகவே, வாய்ந்த அருந்தவத்து இறைவ, சூசை!
நும்மையே உயிர் என்று ஆக நுதலி, நும் நிழலில் வாழ்ந்த
நம்மையே அகன்று போதீர்; நட்பு இடை அகலாது, அன்பின்
செம்மையே பேண்மின்!" என்னா, சென்று மீண்டு எவரும் போனார்.

     "அன்னை மரியாளே, திருமகனே, பொருந்திய அரிய தவத்திற்குத்
தலைவனாகிய சூசைசே! உங்களையே உம் உயிர் என்று முற்றிலும் கருதி,
உங்கள் அருள் நிழலில் வாழ்ந்த எம்மை விட்டு அகன்று போகின்றீர்கள்;
எம்மோடு கொண்ட நட்பு இடையே அகலாமல், அன்போடு செம்மையாகப்
பேணுங்கள்!" என்று கூறி, யாவரும் மீண்டு சென்று, இரவிமாபுரம் போய்ச்
சேர்ந்தனர்.

     நம் என்பது எம் என்பதின் பொருளில் வந்தது.

              வழிநடைக் காட்சி

     - விளம், - விளம், - மா, கூவிளம்