பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 491

                   42
இப்புற தினையன விவரு மெல்லையின்
முப்புறத் திணையில மூவ ரெங்கணு
மொப்புறத் துணையில வுவகை செய்தெசித்
தப்புறத் தமரர்சூ ழணுகிப் போயினார்.
 
இப் புறத்து இனையன இவரும் எல்லையின்,
முப் புறத்து இணை இல மூவர், எங்கணும்
ஒப்பு உறத் துணை இல உவகை செய்து, எசித்து
அப் புறத்து அமரர் சூழ் அணுகிப் போயினார்.

     இரவிமாபுரத்தார் இருந்த இப்பக்கம் இவையெல்லாம் நடக்கும் கால
எல்லையில், மூவுலகிலும் தமக்கு ஒப்பவர் எவரும் இல்லாத மூவரும்,
எங்கும் ஒப்பிட்டுக் காட்டும் அளவு இல்லாத மகிழ்ச்சி கொண்டவராய்,
வானவர் சுற்றிலும் அணுகி வர, எசித்து நாட்டிற்கு அப்பால் சென்றனர்.

 
              43
தீயின ருறவெனச் சிறுகும் பள்னெறி
போயின ரமரர்சூழ் புடைபு டைப்புணர்ந்
தாயின ரருத்தியோ டீரை யாயிரர்
தூயினர் துயர்க்கறத் தொடர்பிற் போயினார்.
 
தீயினர் உறவு எனச் சிறுகும் பல் நெறி
போயினர் அமரர் சூழ் புடை புடைப் புணர்ந்து,
ஆயினர், அருத்தியோடு, ஈர் ஐயாயிரர்,
தூயினர் துயர்க்கு அறத் தொடர்பின் போயினார்.

     வானவர் சூழ்ந்து பக்கம் பக்கமாய் நெருங்கித் துணை வர, தீயவர்
உறவு போல் போகப் போகச் சிறுகும் பல வழிகளிலும் அம் மூவரும்
நடந்து போயினர். அவ்வாறான வானவர் பதினாயிரம் பேர். அவர்கள்,
தூயவராக்கிய அம்மூவரின் துயருக்குத் துணையாக, அறத்தின் தொடர்பு
போல, ஆசையோடு சென்றனர்.

 
                 44
விண்ணுளே பிறந்ததோர் தளத்தின் விண்ணவர்
பண்ணுளே பிறந்ததோர் ரிசைகள் பாடிய
மண்ணுளே பிறந்ததோர் வடுவை மாற்றினர்
தண்ணுளே பிறந்ததோர் தடத்தி னண்ணினார்.