பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 494

தனம் கிடந்து எனக் கிளி தாங்கு இலாத் தினைப்
புனம் கிடந்தன பரப்பு அகன்று போய், துளிக்
கனம் கிடந்து எனக் கரி கிடந்த காடும் போய்,
வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே.

     அவ்வழித் தடம் பொன்னே கிடந்தாற் போலக் கிளிகள் சுமந்து
செல்ல இயலாத தினைக் கதிர்களையுடைய கொல்லைகள் கிடந்த
பரப்பையும் தாண்டிச் சென்றது; துளியையுடைய கருமேகம் தரையிற்
கிடந்தாற்போல் யானைகள் கிடந்த காட்டையும் கடந்து சென்றது;
பாலைவனத்திற் கிடந்த வழியோடு சென்று சேர்ந்தது.

 
                         49
தீரருஞ் சிலையினாண் முறுக்கின் சீர்மையாற்
பேரருந் தவத்தொடு பிறந்த ஞானம்போற்
சோரருங் கருத்தினோர் தொடர்ந்த தங்கதி
நேரருஞ் சுரத்திடை நெகிழ்வி லாயினார்.
 

தீர் அருஞ் சிலையின் நாண் முறுக்கின் சீர்மையால்,
பேர் அருந் தவத்தொடு பிறந்த ஞானம் போல்
சோர் அருங் கருத்தினோர் தொடர்ந்த தம் கதி
நேர் அருஞ் சுரத்திடை நெகிழ்வு இல் ஆயினார்.


     ஒடித்தற்கு அரிய வில்லிற் பூட்டிய நாணினது முறுக்கின் தன்மையாக,
பெரிய அரிய தவத்தோடு பிறந்த தெய்வ ஞானம் நெகிழாதிருத்தல் போல்,
என்னவரினும் சோர்வதற்கு அரிய உணர்வுள்ள அம்மூவரும் தாம்
தொடர்ந்து செல்ல வேண்டிய முடிவிடத்தை நினைவிற் கொண்டு, ஒப்புக்
கூறுதற்கு அரிய பாலைவனத்தினிடையே செல்லவும் மனம் குழையாதவர்
ஆயினர்.

     சோராத கருத்திற்கு வில்லின் நாண் முறுக்கும் தவத்தோடு பிறந்த
ஞானமுமாக இரண்டு உவமைகள்.

 
                    50
நீர்முகத் திரவிகை நீட்டிப் பொற்புறப்
பார்முகத் திரவிருட் படத்தை நீத்தெனச்
சூர்முகத் தழற்றுயர் துடைத்து மூவர்வந்
தேர்முகத் தெழுந்தகா னிலங்கிற் றாயதே.