பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 502

               63
பேர்நலம் பொறித்த கான்றேன்
     பெயர்க்குமோ ரூற்ற தாகி
யார்நலம் பொலித னோக்கீ
     ராயவிவ் வனப்பும் வாட்டிப்
பார்நலம் துறந்திங் கார்ந்த
     படிவரெண் ணின்றி வைகிச்
சேர்நலம் விரும்பி வானோர்
     சென்றுவா னொக்குங் கானே.
 
"பேர் நலம் பொறித்த கான் தேன் பெயர்க்கும் ஓர் ஊற்றது
ஆகி ஆர் நலம் பொலிதல் நோக்கீர். ஆய இவ் வனப்பும் வாட்டி,
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி,
சேர் நலம் விரும்பி வானோர் சென்று, வான் ஒக்கும் கானே.

     "பேரழகு பொறித்துள்ள இப்பாலைவனம் தேன் சுரக்கும் ஓர் ஊற்றை
உடையதாய், நிறைந்த நலத்துடன் இப்பொழுது பொலிவதைப் பாருங்கள்.
பின் நாளில், இப்பொழுது உள்ளதாகிய இவ்வழகையும் வாடச் செய்து, உலக
இன்பத்தைத் துறந்து இங்கு வந்து நிறைந்த தவ முனிவர் எண்ணில்லாது
தங்கியிருந்து, அதனால் உண்டான நலத்தை விரும்பி வானவரும் வந்து
சேர, இவ்வனம் வானகமே ஒக்கும்.

 
          64
காவுள னாகி யென்மேற்
     கருத்தில்வான் குடியன் வேத
நாவுளன் றவத்தின் வாய்ந்த
     நவ்வுளன் வினைநீர் நீந்தி
மேவுளன் வளர்ந்தெந் நாளும்
     வேண்டுமூண் காக முய்ப்பப்
பாவுள னென்பா னீடப்
     பறம்படி முழையுள் வாழ்வான்.