பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 506

     "அங்கு இலரியோன் என்ற முனிவன், வான்மீது இரவுக்கு அரசனாகிய
மதியைச் சூழ்ந்த விண்மீன்கள் போல, முனிவர் மூவாயிரம் பேர் தன்னைத்
தொடர்ந்து வரினும், தன் நெஞ்சத்தில் எவ்வித ஆசையும் அற்ற
தன்மையால் தான் தனித்தே நிற்பான். ஒரு நூலுக்குப் பாயிர உரை
முதன்மையாக விளங்குதல் போல், அவனும் தனக்கு முதல்வனாக
ஆண்டவனையே நோக்கிய வண்ணம், கலை தேய்ந்த பிறை வடிவான
வெற்றி வில்லிற் பூட்டிய நாணின் முறுக்குப் போல் தவத்தில் விறைத்து
நிற்பான்.

     இரவரசு விண்மதியாகவே, தேய் இரவரசு பிறை மதியாயிற்று "பாயிரம்
இல்லாதது நூலன்று என்றது போல, ஆண்டவன் இல்லாதது நன்மையன்று
என்று நினைத்தான்" என்பது பழைய உரைக் குறிப்பு.

 
          69
உரிவளர் தவத்தின் சால்பி
     னுறுத்தமெய் யுருவந் தானே
யெரிவள ருலைகொன் றீன்ற
     விலைப்பலி யாக மாறி
யரிவள ரங்கண் கொன்ற
     வைம்பொறி புதைத்துப் பல்கால்
சொரிவளர் வானுங் காணா
     சோணமா முனிவ னோற்பான்.
 

"உரிவளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே,
எரிவளர் உலை கொன்று ஈன்ற இலைப் பலியாக மாறி.
அரிவளர் அங்கண் கொன்ற ஐம் பொறி புதைத்து பல் கால்
சொரி வளர் வானும் காணா சோண மாமுனிவன் நோற்பான்.


     "உரிய தன்மையாக வளர்த்த தவத்தின் மிகுதியால் அழுத்திய தன்
உடலின் உருவமே, நெருப்பு வளர்த்த அடுப்பு எரித்துக் கொன்று பெற்ற
இலைச் சாம்பல்போல மாறவும். சிங்கங்கள் வளர்கின்ற அவ்விடத்தில் தான்
அடக்கிக் கொன்ற ஐம்பொறிகளைப் புதைத்தும், பல காலக் கணக்கில்
மேகம் வளர்கின்ற வானத்தையும் நிமிர்ந்து பாராமலே சோண மாமுனிவன்
தவம் செய்வான்.

     சொரி - மழையைச் சொரியும் மேகத்திற்குக் காரணப் பெயர்.