பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 509

                  73
தேனிமிர் முல்லை யாகத்
     திருந்தறத் தொகுதி நட்டு
நூனிமிர் தவத்திற் காத்த
     நொறிற்பொறி வேலி கோலி
மேனிமி ரொழுக்க நீரை
     விட்டருண் மணலைப் பாய்த்தி
வானிமி ருலகி னாறும்
     வனத்தினாங் கசோரன் பூப்பான்.
 
"தேன் நிமிர் முல்லையாகத் திருந்து அறத் தொகுதி நட்டு,
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி,
மேல் நிமிர் ஒழுக்க நீரை விட்டு, அருள் மணலைப் பாய்த்தி,
வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின், ஆங்கு அசோரன் பூப்பான்.

     "திருந்திய புண்ணியத் தொகுதியைத் தேன் நிறைந்த முல்லைச்
செடியாக நட்டு, வேத நூல் விதிப்படி வளர்ந்த தவத்தினால் காத்த
அடக்கமுள்ள ஐம்பொறிகளை வேலியாக வளைத்து, மேற்பரப்பில் உயர்ந்த
ஒழுக்கம் என்னும் நீரை ஊற்றி, அருள் என்னும் மணலைச் சுற்றிலும் பரப்பி,
உயர்ந்த வானுலகம் வரையிற் சென்று மணக்கும் பூந்தோட்டம் போல,
அங்கே அசோரன் என்ற முனிவன் புண்ணிய மலர்பூத்து நிற்பான்.

 
                 74
ஆற்றிய தவச்செந் தீயி
     லைம்பொறி யிரும்பிட் டூதி
யேற்றிய தெருளின் ஞான
     விரதமிட் டாய பைம்பொன்
றேற்றிய மறையச் சரகச்
     சீலநன் மணிகள் சேர்த்திப்
போற்றிய தேவ மார்பிற்
     புரோதர னணிப்பூ ணாவான்.
 
"ஆற்றிய தவச் செந்தீயில் ஐம் பொறி இரும்பு இட்டு ஊதி,
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு, ஆய பைம்பொன்,
தேற்றிய மறை அச்சு ஆக, சீல நல் மணிகள் சேர்த்தி,
போற்றிய தேவ மார்பில் புரோதரன் அணிப் பூண் ஆவான்.