பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 517

     தேனைப் பொழியும் பூங்கோலைத் தாங்கிய சூசை, திருமகன்
விரித்துக் கூறிய சொல்லை, உண்மை என்னும் குடத்திலிருந்து ஊற்றிய
அமிழ்தத்தை உண்டாற் போலத் தன் செவியால் அருந்தினான். "தீயோரது
தன்மை பச்சை மண்குடத்தைப் போன்றது. என்றாலும், சுட்ட மண்குடத்திற்கு
ஏற்பட்ட அழிவைப் போக்குதல் அரிதென்பதுபோல, தவத்தைக்
கைவிட்டவரும் இந்தச் சுட்ட மண்குடம் போன்று தெளிந்து மீண்டுங்
நன்னெறிப் படார்" என்றான்.

     பைக்குடம் - பசுமை+குடம், பச்சை மண்குடம் எளிதில் உடைந்தாலும்
மீண்டும் ஒட்டிக் குடமாய்க் கூடும்; சூளையிற் சுட்டால் சுட்ட குடமாகவும்
அமையும். சுட்ட மண்குடம் எளிதில் உடையாதெனினும், உடைந்தால்
ஒட்டுவதும் கூடுவதும் இல்லை. இவ்வாறு உவமையை விரித்துக் கொள்ள
வேண்டும். பொதுமக்கள் எளிதிற் பாவத்து வீழினும் அதனைப் பரிகரித்து
நெறிப்படலும் எளிது; புண்ணியத்து நிலைப்படுதலும் கூடும். தவங்கொண்ட
மேலோர் வீழ்ச்சி அவ்வாறு நெறிப்படல் அரிது என்பது கருத்து.

                       வானவர் வாழ்த்து

     கருவிளம், கருவிளம், புளிமா, கூவிளம், கருவிளம், கருவிளம்,
புளிமா, கூவிளம்

 
                       85
உரைத்தன மதுத்துறை யுரைகள் கேட்டலு
     முளத்தெழு முவப்பொடு வரைவி லாப்புடை
நிரைத்தன விருட்கெட வெயிலை யாக்கிய
     நிறத்தணி யுருக்கொடு வமரர் கோக்கணம்
வரைத்தன குருக்கதி ரிரவி நீர்க்கடல்
     மறுத்தெழ வுடுக்கணம் விழுவ போற்றிரை
யிரைத்தன கடற்கலி மெலிய வார்த்துட
     லெடுத்துல களித்தவற் றொழுது சாற்றினார்.
 
உரைத்தன மதுத் துறை உரைகள் கேட்டலும், உளத்து எழும்
                         உவப்பொடு, வரைவு இலா, புடை
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து, அணி உருக்
                         கொடு அமரர் கோக் கணம்
வரைத்து அன குருக் கதிர் இரவி நீர்க் கடல் மறுத்து எழ உடுக்
                         கணம் விழுவ போல், திரை
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து, உடல் எடுத்து உலகு
                         அளித்தவன் தொழுது சான்றினார்;