பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 518

     திருமகன் உரைத்த தேன் இனிமை வகையைச் சேர்ந்த உரைகளைக்
கேட்டதும், வானவருள் அரச கணத்தைச் சேர்ந்த பத்திராசனர்
எனப்படுவோர், தம் உள்ளத்து எழுந்த உவகையோடு, எண்ணிக்கை
இல்லாது வந்து கூடினர்; பக்கத்தில் வரிசை பெற்றுக் கிடந்த இருள்
கெடும்படி ஒளியைப் பரவ விட்ட நிறத்தோடும், அழகிய உருவத்தோடும்
விளங்கினர்; சித்திரமாக வரைந்தது போன்ற செந்நிறக் கதிரை உடைய
பகலவன் நீர் நிறைந்த கடலை விட்டு மேலே எழுந்ததும் விண்மீன் கூட்டம்
விழுந்து மறைவது போல், தாமும் ஒளி மங்கத் திரு மகனின் அடியில்
விழுந்து வணங்கினர்; அலையடித்து இரைந்த கடலின் ஓசை மெலியுமாறு
முழங்கி மனுவுடல் எடுத்து இவ்வுலகைக் மீட்க வந்த திருமகனைத் தொழுது
இவ்வாறு வாழ்த்துக் கூறினர்:

     பத்திராசனர்: வானோர் கணம் ஒன்பதுள் ஒரு வகையார்; கடவுள்
எழுந்தருளியிருக்கும் அரியணை அருகில் இருப்பவர். எனவே, அரச கணம்
எனப்பட்டனர்.

 
                        86
தகைத்தகு வனப்பெழ மணிக ளீட்டுபு
     தளிர்த்தன திருத்தகு நகரின் வாழ்க்கையு
நகைத்தகு வனத்துரி வளமி தாக்கலி
     னசைக்கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி
மிகைத்தகு தவத்துரு வெருவு காட்டினும்
     விளைத்தன வரத்தருள் மலிய வீட்டுயர்
திகைத்தகு நலத்தெழு வனமி தாய்ப்புகழ்
     திளைத்தன கவித்தொடை நிகரு மாட்சியோ.
 
"தகைத் தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு, தளிர்த்தன திருத் தகு
                     நகரின் வாழ்க்கையும்
நகைத் தகு, வனத்து உரி வளம் இது ஆக்கலின், நசைக் கொடு
                     பகைத்தன பொறிகள் மாய்த்து உளி,
மிகைத் தகு தலத்து உரு வெருவு காட்டினும், விளைத்தன வரத்து
                     அருள் மலிய, வீட்டு உயர்
திகைத் தகு நலத்து எழு வனம் இது ஆய், புகழ் திளைத்தன, கவித்
                     தொடை நிகரும் மாட்சியோ?

     "தகுதி என்னத் தக்க அழகில் ஓங்குமாறு மணிகளைக் குவித்து
வைத்து, அதனால் செழித்த செல்வம் மிக்க நகர வாழ்க்கையையும் எள்ளி