பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 52

                 83
என்க ணேயுயி ரமுத மேயென
     திதய மேயுயி ரினிமையே
நின்க ணேயுயிர் மடிய வேநினை
     நினைய வேயக னிலையுழி
தன்க ணேயுயி ரொடுமி ரேனினி
     யெனலொ டேமகர்த் தணர்வரே
புன்க ணேயுயிர் பருக வேயொரு
     புனல றாவிழி பொழியுமே.
 
''என் கணே, உயிர் அமுதமே, எனது இதயமே, உயிர் இனிமையே,
நின்கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி
தன்கணே உயிரொடும் இரேன் இனி!'' எனலொடே மகர்தணர்வரே
புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே.

      ''என் கண்ணே, என் உயிருக்கு அமுதமே, எனது இதயமே, என்
உயிருக்கு இனிமையே, உன்னிடமிருந்து உயிர் மடியவும் அதன்பின் நான்
நினைந்து கொண்டிருக்கவுமாக இவ்வுலகத்தில் தனக்கு உரியதென்ற
இடத்தில் இனி உயிரோடும் இரேன்!'' என்று சொல்லி மக்களைப் பிரிந்த
தாய்மார் கொள்ளும் துன்பமே தம் உயிரைப் பருக அவர்தம் விழிகள்
ஒரு வெள்ளத்தை இடையறாது பொழிந்து கொண்டிருக்கும்.

     அகல் நிலை - உலகம்; அன்மொழித்தொகை. என்கணே, நின்கணே,
தன் கணே என்ற இடத்தெல்லாம் 'கணே' என்பது கண்ணே' என்பதின்
இடைக்குறை.


               84
தாய ரோதையு மடித ரும்பல
     தனய ரோதையு முதிரமே
பாய லோதையும் வதைசெ யும்பல
     படைக ளோதையு மறமலி
தீய ரோதையு மினைவ ரும்பல
     திசையி லோதையும் வெருவறுந்
தூய ரோதையு மிடியொ டுங்கடல்
     துதையு மோதையு மிணையிலா.