பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 521

புதுப்பட வனப்பொடு மரிதி லாக்கிய
     புழைக்குழற் குரற்கல முளரி வாய்த்தன
மதுப்பட விசைப்படு மினிய பாப்புகழ்
     வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார்.
 
விதுப்பட உருப்படும் அமரர், பாத் தொடை விளைத்து, இவை
                    இசைத்து, அடி தொழுது வாழ்த்து உளி,
சதுப்பட வகுப்பொடு பரவு அது ஆய், பல சதத்து அணி ஒருப்பட,
                    எம வினா பட,
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழைக்குழல் குரல் கலம்
                    உளரி, வாய்த்தன
மதுப்பட இசைப்படும் இனிய பாப்புகழ் வகுத்தனர், துதித்தனர்,
                    தொழுது வாழ்த்தினர்.

     திங்களைப் போன்ற உருவம் கொண்ட அவ்வானவர், பாக்கள்
தொடுத்தமைத்து, இவற்றைப்பாடி, திருமகனின் அடியைத் தொழுது
வாழ்த்திக் கொண்டிருக்கையில், ஏனைய வானவர், சதுரமாய் அமைந்த
அணிவகுப்பு முறையோடு பரவலாய் அமைந்துள்ளதாய், பல நூறு அணிகள்
ஒன்றுபடக்கூடி, நமது ஆய்வுக்கு அடங்காத முறையில், புதுமை வாய்ந்த
அழகோடு அரிதாய்ச் செய்த துளை கொண்ட புல்லாங் குழலும்
நரம்பினாலாகிய யாழும் வாசித்து, அரிதாய் வாய்த்த தேன் போன்ற
இசையோடும் கூடிய இனிய பாக்களை அமைத்து, துதித்து, தொழுது
வாழ்த்தினர்.

     'ஏனைய வானவர்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. 'சதுரம்'
என்பதன் கடைக்குறையாகிய 'சதுர்' என்பது எதுகை ஒலி ஒற்றுமைப்
பொருட்டு, 'சது' என அமைக்கப்பட்டது. ஏழு நரம்புகளில் ஒன்றாகிய 'குரல்'
ஆகு பெயராய் நரம்பைக் குறித்தது.

 
               90
வலித்தன கலக்குர றொனிகள் மாற்றிட
     மலர்த்துறை யடுத்தளி யினிதி லார்த்தலு
மொலித்தன மடக்குயி லிசைக ணீர்த்தலு
     மொளிச்சிறை புடைத்தெனை பறவை பார்த்தலும்
பொலித்தன விழித்தழை விரிய நோக்கிய
     பொறிக்கெழு மயிற்றிர ளரிய கூத்தெழக்
கலித்தன விடைத்தொறு முவமை நீக்கிய
     களிப்பொடு வனப்பெழு வனம தாக்கமே.