பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 522

வலித்தன கலக்குரல் தொனிகள் மாற்றிட,
     மலர்த்துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும்,
ஒலித்தன மடக்குயில் இசைகள் நீர்த்தலும்,
     ஒளிச்சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும்,
பொலித்தன விழித்தழை விரிய நோக்கிய
     பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ,
கலித்தன இடைத் தொறும் உவமை நீக்கிய
     களிப்பொடு, வனப்பு எழு வனம் அது ஆக்கமே.


     வலிமையோடு ஒலித்த யாழ் நரம்புகளின் ஓசைகளையும் மாற்றக்
கூடிய தன்மையாய், மலர் நிறைந்த நீர்த்துறையை அடுத்து வண்டுகள்
இனிதாக முழங்கவும், ஒலித்த இளங் குயில்களின் பாடல்கள் பொருத்தமாய்
அமையவும், ஒளி கொண்ட தம் சிறகுகளை அடித்துக் கொண்டு
மற்றெல்லாப் பறவைகளும் பார்த்துக் கொண்டிருக்கவும், பொலிவான
கண்களைக் கொண்டுள்ள தோகையை விரித்துப் பார்த்த புள்ளிகள்
நிறைந்த மயில்களின் கூட்டம் அரிய நடனம் எழுந்து நின்று ஆடவுமாக,
ஓசை மிக்க இடந்தோறும் உவமை கூற இயலாத களிப்போடு, அழகாய்
எழுந்து நின்ற அவ்வனத்தின் செல்வம் சிறந்து தோன்றும்.

     'சிறந்து தோன்றும்' என்ற முடிக்குஞ் சொற்கள் வருவிக்கப்பட்டன;
'பொலிந்தன' என்பது எதுகை இன்னோசைப் பொருட்டு வலித்தல் விகாரம்
கொண்டது.

                  மூவரும் யூதர் நாடு அடைதல்

     நிரைநேர், நேர்நிரை, நேர்நிரை, நேர்நிரை

 
                91
எழுக வென்றன னேழுல காள்பவன்
மெழுக விட்டன மென்மலர்ப் பூந்தட
மொழுக மூவரு முள்ளுவப் பின்கடல்
முழுக வேகுபு மொய்வன நீங்கினார்.
 
"எழுக" என்றனன் ஏழ் உலகு ஆள்பவன்
மெழுக விட்டு அன மென் மலர்ப் பூந்தடம்
ஒழுக, மூவரும் உள் உவப்பின் கடல்
முழுக ஏகுபு, மொய்வனம் நீங்கினார்.

     ஏழு உலகங்களையும் ஆள்பவனாகிய திருமகன், "எழுந்து செல்க"
என்றான். என்னவும், மெழுகி விட்டாற் போன்ற மெல்லிய மலர்கள் நிறைந்த