பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 524

               94
பகைய துள்ளெனப் பாந்தளின் செல்வென
நகைய மின்னென நங்கையர் நெஞ்செனத்
தகைய தோர்நெறி செம்மைத காதுறுந்
திகைய தெய்தினர் செம்மையு ளத்தினார்.
 
பகையது உள் என, பாந்தளின் செல்வு என,
நகைய மின் என, நங்கையர் நெஞ்சு எனத்
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும்
திகை அது எய்தினர், செம்மை உளத்தினார்.

     செம்மனம் படைத்த அம்மூவரும், பகைவரது மனம் என்றும்,
பாம்புகள் ஊர்ந்து சென்ற தடம் என்றும், நகைத்த தன்மையாய்த் தோன்றும்
மின்னல் என்றும், மகளிர் மனம் என்றும் சொல்லத்தக்கதொரு வழி செம்மை
பொருந்தாது செல்லும் திசையை வந்தடைந்தனர்.

     பகைவர் உள்ளம் துன்பத்திற்கும், பாம்பின் தடம் ஒடுக்கத்திற்கும்,
மின்னலின் நகை வளைவிற்கும், நங்கையர் நெஞ்சம் மாறும் இயல்புக்கும்
பொருந்துவனவாகக் கொள்க. செல்வு - செலவு; செல்லுதல். அது, சென்ற
தடத்திற்கு ஆகுபெயர்.

 
                  95
தேங்கொள் பூமலி நீண்டிமி சுச்சிமே
றூங்கொள் வாவலி றாலறத் தூய்மட
லோங்கொள் பூகநன் முத்துதி ரோங்கலைத்
தாங்கொ ளத்தடஞ் சாய்ந்தரு கண்மினார்.
 
தேம் கொள் பூமலி நீண் திமிசு உச்சி மேல்
தூங்கு ஒள் வாவல் இறால் அற, தூய் மடல்
ஓங்கு ஒள் பூகம் நல் முத்து உதிர் ஓங்கலை,
தாம், கொள, தடம் சாய்ந்து, அருகு அண்மினார்.

     தாம் மூவரும், தேனைக் கொண்டுள்ள பூக்கள் நிறைந்த வேங்கை
மரத்தின் உச்சிமேல் தொங்கும் வௌவால் போன்ற தேனடைகள் கிழியுமாறு,
தூய மடல்கள் கொண்ட ஒளி பொருந்திய கமுகின் நல்ல முத்துப் போன்ற
அரும்புகள் உதிரும் மலையை அடைய எண்ணி, அத்தடத்தில் பொருந்தி
நடந்து, அருகே சென்றடைந்தனர்.