பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 525

     வௌவால் தேனடைக்கு உவமையாகவும், முத்து அரும்பிற்கு
உருவகமாகவும் நின்றன.

 
                      96
ஆலம் விற்பன கண்பொது வாட்டியார்
ஞாலம் விற்பன வாய்த்துகிர் நட்பென
வேலம் விற்பன வெற்படி யீட்டிய
கோலம் விற்பன காஞ்சிரக் கொள்கையே.
 

ஆலம் விற்பன கண் பொது ஆட்டியார்
ஞாலம் விற்பன வாய்த் துகிர் நட்பு என,
ஏலம் விற்பன வெற்பு அடி ஈட்டிய,
கோலம் விற்பன, காஞ்சிரக் கொள்கையே.


     ஏலத்தை விளைவித்து விற்கக் கூடிய அம்மலையடியில் மிகுதியாகக்
கனிகளைக் கொண்டுள்ள எட்டி மரங்களின் தோற்றம், நஞ்சை விலை கூறி
விற்பது போன்ற கண்களைக் கொண்ட பொது மகளிர், உலகத்தை விற்கத்
தக்கதாய்த் தம் வாயாகிய பவளத்தில் வெளிக் காட்டும் நட்பைப் போல,
தம் அழகிய கோலத்தை விற்பன போல் காட்டி நிற்கும்.

     உள்ளே நஞ்சும் வெளியே அழகும் கொண்டுள்ள எட்டிக் கனி,
உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் அன்பும் கொண்ட விலை மகளிருக்கு
ஒப்பாயிற்று.

 
                   97
வலவ கங்கிரி வைத்துந டந்துபோய்க்
கலவ மஞ்ஞைக ளிப்புறத் தீங்குழ
லுலவ வாயர்நி ரைக்கொடு ழைக்குலங்
குலவ முல்லைநி லங்கொள வேகினார்.
 
வல அகம் கிரி வைத்து நடந்து போய்,
கலவ மஞ்ஞை களிப்பு உற தீம் குழல்
உலவ, ஆயர், நிரைக் கொடு உழைக் குலம்
குலவ முல்லை நிலம் கொள ஏகினார்.

     அம் மலையைத் தமக்கு வலப் புறமாக இட்டு மூவரும் நடந்து போய்,
இடையர், தோகை மயில்கள் களிப்படையுமாறு தம் இனிய புல்லாங் குழல்