நொய்ய ஆய்
மது மலர் நொதுத்த கோலினான்
"வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது?" என,
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன்,
செய்ய வாய் அம்புயம் திறந்து, செப்பினான்: |
மென்மை
உடையனவாய்த் தேன் நிறைந்த மலர்களை விரித்த
கோலைத் தாங்கிய சூசை, "விரும்பத் தக்கனவாய் மேகங்கள் தவழும்
அம்மலையில் நீ அழுமாறு என்ன உள்ளது?" என்று வினவ, உயிர்
பிழைப்பதற்கான வழியை நமக்கு அருளவென்று உடலெடுத்து வந்துதித்த
ஆண்டவன், தன் செந்நிற வாயாகிய தாமரை மலரைத் திறந்து, பின்
வருமாறு சொல்லலானான்:
| 105 |
தேனலந் தோய்தயை
சேர்த்தி யாபிறாங்
கானலந் தோய்தவத் தீன்ற காதலன்
வானலந் தோய்மகிழ் வுய்த்த மைந்தனாய்
நானலந் தோய்திரு நகுல னென்பவே. |
| |
"தேன் நலம்
தோய் தயை சேர்த்தி, ஆபிறாம்,
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன்,
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய்,
'நால் நலம் தோய் திரு நகுலன்' என்பவே. |
"ஆபிறாம்
என்பவன், தேனின் நலம் தோய்ந்த தெய்வ அருள் சேரக்
கொண்டு, வீட்டிலிருந்தே காட்டிற் செய்வதன் நலம் தோய்ந்த தவத்தினாற்
பெற்றெடுத்த மகன், வானுலகத்தின் நலம் தோய்ந்த மகிழ்ச்சியைக்
கொணர்ந்த மகனாய் அமையவே, யாவரும் அவனை, 'நால் வகை
நலங்களும் தோய்ந்த நகுலன்' என அழைக்கலாயினர்.
"தமிழ்
மொழியால் நகுலன் எனினும், வடமொழியால் இசாக்கு எனினும்
ஒக்கும் நால் வகை நலமாவன: அற நலம், அருள் நலம், பொருள் நலம்,
கல்வி நலம் என நான்கும்" என்பது பழைய உரை அடிக் குறிப்பு. இந்
நகுலன் வரலாறு, ப. ஏ., ஆதியாகமம், 21 : 1 - 3; 22:1 - 12 காண்க.
|