பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 530

                       106
கலைபுறங் கண்டசேய் கனிவ ளர்ந்தபின்
கொலைபுறங் கண்டவாட் கொண்டு கொல்லென
வலைபுறங் கண்டநோய் தாதைக் காண்டகை
யுலைபுறங் கண்டதீ யொப்பச் செப்பினான்.
 
"கலை புறங்கண்ட சேய் கனி வளர்ந்த பின்.
'கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல்' என,
அலை புறங்கண்ட நோய், தாதைக்கு, ஆண்டகை,
உலை புறங்கண்ட தீ ஒப்பச் செப்பினான்.

     "கலைகளையெல்லாம் வென்ற மகன் கனிவோடு இளைஞனாய்
வளர்ந்த பின், ஆண்டவன், 'கொலையை வென்ற வாளைக் கொண்டு
இவனைக் கொல்' என்று, கடலையும் வென்ற துன்பம் தரும் ஒரு செய்தியை,
அடுப்பு நெருப்பையும் வென்ற தீக்கு நிகராக, அவன் தந்தைக்குச்
சொன்னான்.

 
                     107
அப்பணி யுயிரறுத் தருந்திற் றாயினும்
வெப்பணி பணிபணிந் தியற்ற வெய்தென
விப்பணி யில்லவட் கிசைக்கி லாபிரான்
செப்பணி மலைமகற் சேர்த்தி நாடினான்.
 
"அப் பணி உயிர் அறுத்து அருந்திற்று ஆயினும்,
வெப்பு அணி பணி பணிந்து இயற்ற, வெய்து என,
இப் பணி இல்லவட்கு இசைக்கு இலா, பிரான்
செப்பு அணி மலை மகற் சேர்த்தி, நாடினான்.

     "அக் கட்டளை தன் உயிரை அறுத்து உண்பது போல் தோன்றினும்,
அது ஒரு தாய்க்குக் கேட்கக் கொடியதென்று கருதி, இக் கட்டளையை
ஆபிராம் தன் மனைவிக்குத் தெரிவிக்காமல், சுடும் தன்மையான அப்
பணியைப் பணிவோடு செய்து முடிக்குமாறு, ஆண்டவன் சொல்லிய அழகிய
இம்மலையில் மகனைக் கொண்டு சேர்த்து, தான் அதனைச் செய்து முடிக்க
நாட்டம் கொண்டான்.