பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 532

                 110
அயிர்தந்தா லுளமறுத் தழுங்கக் கைப்புறுந்
துயர்தந்தா லரியவோர் தொடர்பைத் தோற்றுவித்
துயிர்தந்தா னவற்குநா னுயிர்தந் தாலெனொ
வயர்தந்தா யெனமகன் வலித்துச் சொல்லினான்.
 
 "'அயிர் தந்தால், உளம் அறுத்து அழுங்கக் கைப்பு உறும்
துயர் தந்தால், அரிய ஓர் தொடர்பைத் தோற்றுவித்து,
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ,
அயர் தந்தாய்!' என மகன் வலித்துச் சொல்லினான்.

     "மகன், தந்தையை நோக்கி, 'இது பற்றி மனம் தளரும் தந்தையே,
இன்பத்தைத் தந்தாலும், உள்ளத்தை அறுத்தாற் போல் வருந்துமாறு
கசப்பான துன்பத்தைத் தந்தாலும், அதன் மூலம் அரியதொரு நட்பையே
தோற்றுவித்து, என் உயிரை எனக்குத் தந்த அவனுக்கு நான் அவ்வுயிரைத்
தந்தால் என்ன?' என்று துணிந்து சொன்னான்.

 
                 111
தாதைபெய் கண்மழை யோம்பித் தாண்மிசை
கோதைபெய் திறைஞ்சியென் குறைபொ றுப்பவென்
றோதைபெய் முகிலறு முச்சிப் பீடமேன்
மேதைபெய் திறத்தெழீஇ விழுக்கை கூப்பினான்.
 
தாதை பெய் கண் மழை ஓம்பி, தாள் மிசை
கோதை பெய்து இறைஞ்சி, 'என் குறை பொறுப்ப!' என்று,
ஓதை பெய் முகில் அறும் உச்சிப் பீட மேல்
மேதை பெய் திறத்து எழீஇ, விழுக் கை கூப்பினான்.

     பின், தந்தை பொழிந்த கண்ணீர் மழையைத் துடைத்து நீக்கி, அவன்
கால்களில் மாலை அணிந்தாற் போல் தன் கைகளால் தழுவி வணங்கி, 'என்
குற்றங்களைப் பொறுப்பாயாக' என்று வேண்டி, ஓசையோடு பெய்யும்
மேகங்களை அறுத்து நீக்கும் அம் மலையுச்சியில் அமைந்த பலிபீடத்தின்
மேல், தன் அறிவுத் திறத்தைப் பொழிந்து காட்டிய தன்மையாய் ஏறிச்
சென்று, மீண்டும் தன் சிறந்த கைகளைக் கூப்பி வணங்கினான்.

     எழுந்து என்பது எழிஇ எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.