பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 535

செல்வம் படைத்த வல்லவனே, குற்றத்தைப் போக்கிய அவ்விருவரும்
கொலைக்குக் கொண்ட துணிவே போதுமானதென்றால், நீ மட்டும் ஒழுங்கு
தப்பிய மனித உயிர்களை மீட்டுக் காக்கும் பொருட்டு இறக்க வேண்டுவது
ஏன்?" என்று கேட்டு அழுதான்.

 
                      116
துப்புங்கா யெரியென்றாற் சுடுங்கொல்லோ சொற்றியவோ
ரொப்புங்காட் டியபொருளு மொன்றெனவோ வவனிகராய்த்
தப்புங்கா சினியளிக்கச் சாகுதலென் பாலென்னச்
செப்புங்கா லெமக்கிரங்கித் திருமைந்தன் மீண்டுரைத்தான்.
 
"துப்பும், காய் எரி என்றால், சுடுங் கொல்லோ? சொற்றிய ஓர்
ஒப்பும், காட்டிய பொருளும் ஒன்று எனவோ? அவன் நிகராய்
தப்பும் காசினி அளிக்கச் சாகுதல் என்பால்" என்னச்
செப்பும் கால், எமக்கு இரங்கி, திரு மைந்தன், மீண்டு உரைத்தான்.

     திருமகன், "பவளமும், ஒப்புமை கருதி, காயும் நெருப்பு என்று
கூறவே, அந்நெருப்பைப்போல் தானும் சுடுமோ? சொன்ன ஓர் உவமையும்,
அவ்வுவமைக்குக் காட்டிய பொருளும் ஒன்று எனக் கொள்ளலாமோ?
அவனுக்கு ஒரு வகையில் நிகராகி, தவறு செய்யும் உலகத்தை மீட்டுக்
காக்கும் பொருட்டுச் சாதல் என்பால் இயைவதாகும்" என்று சொல்லும்
போதே, நம் பொருட்டு இரங்கி, மீண்டும் இவ்வாறு தொடர்ந்து உரைத்தான்.

 
                     117
அந்நாளும் வந்தொழிய வகமகிழ்வீங் கெனக்குண்டோ
பன்னாளு நானிறப்பப் பற்றியநீண் மரந்தன்னை
இந்நாளுங் காணாதா லிடர்க்கெல்லை யிலையென்றான்
பின்னாளுந் துணையற்றுப் பெருகுதயைக் கடலன்னோன்.
 

"அந் நாளும் வந்து ஒழிய, அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ?
பல் நாளும் நான் இறப்பப் பற்றிய நீள் மரந் தன்னை
இந் நாளும் காணாதால், இடர்க்கு எல்லை இலை" என்றான்,
பின் நாளும் துணை அற்றுப் பெருகு தயைக் கடல் அன்னோன்.