பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 536

     பிற்காலத்தும் ஒப்பற்றுப் பெருகும் கருணைக் கடலாகிய
அத்திருமகன், "அந்த நாள் வந்தாலொழிய, இவ்வுலகில் எனக்கு மன
மகிழ்ச்சி உண்டோ? நான் இறக்கும் பொருட்டுப் பல காலமாய்ப் பற்றி
நின்ற அந் நெடிய சிலுவை மரத்தை இந்நாளளவும் காணப் பெறாமையால்,
நான் அடையும் துன்பத்திற்கு எல்லையில்லை" என்றான்.

 
                    118
மண்விளக்குஞ் சுடரன்னோன் வருத்தமற வானவர்தாம்
விண்விளக்குங் கதிர்திரட்டி மேல் வனைந்த வோர்சிலுவை
கண்விளக்கும் பகலினுஞ்செங் கதிர்பரப்பக் காட்டினரால்
பண்விளக்குந் தேமொழியான் பரிவற்றுள் ளுவந்துரைத்தான்.
 
மண் விளக்கும் சுடர் அன்னோன் வருத்தம் அற, வானவர் தாம்
விண் விளக்கும் கதிர் திரட்டி மேல் வனைந்த ஓர் சிலுவை
கண் விளக்கும் பகலினும் செங் கதிர் பரப்பக் காட்டினர் ஆல்.
பண் விளக்கும் தே மொழியான், பரிவு அற்று, உள் உவந்து,
                                         உரைத்தான்:

     உலகத்தை விளங்கச் செய்யும் கதிரவன் போன்ற திருமகனின்
வருத்தம் நீங்குமாறு, வானவர் தாமே, வானத்தை விளங்கச் செய்யும் ஞாயிறு
திங்கள் விண்மீன்களின் கதிர்களைத் திரட்டி மேலுலகில் தாமே செய்த ஒரு
சிலுவையை, கண்களுக்கு ஒளிதரும் பகலினும் சிறந்த செங்கதிர்களைப்
பரப்பிய வண்ணமாய்க் காட்டி நின்றனர். பாடலையும் விளங்கச் செய்யும்
தேன் போன்ற சொல்லை உடைய திரு மகன் அதனைக் கண்டு, துன்பம்
நீங்கி, மனம் மகிழ்ந்து, இவ்வாறு கூறலானான்;

 
                 119
ஏரணியே யென்னன்பே யென்னன்பிற் கிரதமிதே
சீரணியே யுயர்வீட்டைத் திறக்குங்கோ லிதேயின்பத்
தாரணியே யெங்கணுநா னாண்டோச்சுஞ் செங்கோலே
பேரணியே யெனதுயிரிற் பேருயிரே வாழியவே.
 
"ஏர் அணியே, என் அன்பே, என் அன்பிற்கு இரதம் இதே;
சீர் அணியே, உயர் வீட்டைத் திறக்கும் கோல் இதே; இன்பத்
தார் அணியே, எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே
பேர் அணியே, எனது உயிரின் பேர் உயிரே, வாழியவே!"