பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 537

     "அழகிய அணிகலனாகவும் என் அன்பாகவும், என் அன்பிற்குத்
தேராகவும் அமைந்தது இச்சிலுவையே; சிறந்த அணியாகவும், உயர்ந்த வான்
வீட்டைத் திறக்க உதவும் திறவு கோலாகவும் அமைந்தது இதுவே; ஆதலால்
இன்பம் தரும் மாலையாகிய அணியே, எங்கும் நான் ஆண்டு நடத்தும்
செங்கோலே, யாவற்றினும் பெரிய அணியே, எனது உயிருக்குப் பெரிய
உயிரே, நீ வாழ்க!"

 
                   120
என்றான்றா னன்புவிசை யேந்தியதன் னுடலுமெழீஇச்
சென்றான்றா னச்சிலுவை திருமார்பிற் சேர்த்தணைத்தா
னின்றான்றா னமுதாழி நீர்முழுகி யின்பத்துக்
குன்றான்றான் சுடர்குன்றக் கொழுங்கதிர்சூழ் பரப்பினனால்,
 
என்றான் தான்; அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇச்
சென்றான் தான்; அச் சிலுவை திரு மார்பில் சேர்த்து அணைத்தான்.
நின்றான் தான்; அமுது ஆழி நீர் முழுகி இன்பத்துக்
குன்றான் தான்; சுடர் குன்றக் கொழுங் கதிர் சூழ் பரப்பினன் ஆல்.

     தான் இவ்வாறு சொல்லி, அன்பின் வேகம் ஏந்திய தன் உடலும்
எழுந்து மேலே சென்றான்; அச்சிலுவையைத் தன் திருமார்போடு சேர்த்துத்
தழுவி நின்றான்; அமிழ்தக் கடல் நீரில் மூழ்கி, இன்பம் குறையாதவனாய்,
கதிரவன் ஒளியும் குறைபடுமாறு செறிந்த கதிர்களைச் சுற்றிலும் பரப்பினான்.

 
                     121
அலையீன்ற செஞ்சுடர்போ லாங்கெழுஞ்சே யுயிர்செல்லக்
கொலையீன்ற வெற்றுடம்பாய்க் கூற்றுமிலா தசைவுமிலா
திலையீன்ற பூங்கொடிகொள் ளெழுந்தவனுந் தாயுமழு
துலையீன்ற தீயுருகு மோவியங்க ளெனநின்றார்.
 
அலை ஈன்ற செஞ் சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல,
கொலை ஈன்ற வெற்று உடம்பாய், கூற்றும் இலாது, அசைவும் இலாது,
இலை ஈன்ற பூங் கொடி கொள் எழும் தவனும், தாயும், அழுது
உலை ஈன்ற தீ உருகும் ஓவியங்கள் என, நின்றார்.