பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 541

விண்முழுது இறைஞ்சும் தக்கோர் விரி கரை வதிந்த போழ்தில்,
பண் முழுது ஒழிக்கும் தீம் பாப் பறவை சூழ் இமிழின் பாட,
மண் முழுது அன்றி, வானும், ஆற்று அரும் வனப்புக்காண,
கண் முழுது உடம்பு உற்று அன்ன கயம் எலாம் பூத்தது அன்றோ.


     விண்ணுலகம் முழுவதும் வணங்கும் தகுதி வாய்ந்த அம்மூவரும்
அத்தடாகத்தின் பரந்த கரையில் அமர்ந்திருந்தபோது, யாழின் இனிமையை
முழுவதும் ஒழிக்கக்கூடிய இனிய பாடலைப் பறவைகள் சூழ நின்று
இனிமையாய்ப் பாட, இம்மண்ணுலகம் முழுவதுமேயன்றி, விண்ணுலகமும்
ஒப்பாகாத. அவர்கள் அழகைக் காண தானும் தன் உடம்பு முழுவதும்
கண்களைப் பெற்றது போன்று அத்தடாகம் முழுவதும் பூத்து நின்றது.

 
                     128
எல்வினைக் காண மாலைக் கிருள்குணக் கெதிர்ந்த தேபோல்
வில்லினைச் சுமந்த கையால் வேடருந் தழைத்தூ சேந்தி
யல்லினைப் போனல் லாரு மடைந்தரி தருள்மீக் கூரச்
செல்லினைப் பொறுக்குங் குன்றின் றீங்கனி பரப்பி னாரே.
 
எல்லினைக் காண மாலைக்கு இருள் குணக்கு எதிர்ந்ததே போல்,
வில்லினைச் சுமந்த கையால் வேடரும் தழைத்தூசு ஏந்தி,
அல்லினைப் போல் நல்லாரும் அடைந்து, அரிது அருள் மீக் கூர,
செல்லினைப் பொறுக்கும் குன்றின் தீம் கனி பரப்பினாரே.

     மாலை வேளையில் கதிரவனைக் காண இருள் கிழக்கினின்று
எதிர்கொண்டு வந்ததுபோல், வில்லைத் தாங்கிய கையோடு வேடரும்
இலைகளால் தைத்துப் பின்னிய உடை அணிந்து வர, இரவு போன்ற
நிறங்கொண்ட மகளிரும் அங்கு வந்தடைந்து, தம் குலத்தார்க்கு அரிதாய்க்
காணும் அருள் தம்மிடத்து மிக மிகக் கொண்டு, மேகங்களைத் தாங்கி
நிற்கும் அம் மலையிற் கிடைக்கும் இனிய கனிகளைக் காணிக்கையாகப்
பரப்பி வைத்தனர்.