பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 545

                 துன்பப் பயன் விளக்கம்

 
                     134
இன்வள ருவப்பிற் கேட்ட விவைமறுத் துரைக்குஞ் சூசை
கொன்வளர் பொருளின் செல்வங் கூவிடத் தெறிந்த தேபோற்
பொன்வளர் திருமிக் கூர்தல் பூரியர் கண்ணுங் கண்டால்
மின்வள ருருவிற் றோன்றி விளிநலம் விரும்பல் வேண்டா.
 
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை:
"கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல்,
பொன் வளர் திரு மிக்கு ஊர்தல் பூரியர் கண்ணும் கண்டால்,
மின் வளர் உருவின் தோன்றி விளி நலம் விரும்பல் வேண்டா.

     இனிமை மிகுந்த மகிழ்ச்சியோடு இவற்றையெல்லாம் கேட்டறிந்த
சூசை, அம்முதியோனின் இறுதிக் கருத்தை இவ்வாறு மறுத்துச் சொல்வான்:
"வீணாக வளரும் பொருட் செல்வத்தை இப்பூமியில் விட்டெறிந்தாற்போல,
பொன்னோடு வளரும் பிற செல்வங்கள் பாவிகளிடத்தும் மிகுதியாகப்
பொருந்திக் கிடக்கக் காண்பதனால், மின்னல்போல் வளர்ந்த உருவமாய்த்
தோன்றி விரைவில் அழியும் செல்வ நலத்தை விரும்புதல்
வேண்டத்தக்கதன்று.

     "பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள" என்ற குறள் (241) இங்கு
நினைவு கூரத் தக்கது.

 
                   135
சலத்தெலா நிலையு மொன்றோ தருக்கெலாங் களியு
                               மொன்றோ
நிலத்தெலாம் விளைவு மொன்றோ நிலைபல நமக்கு
                               முண்டாய்க்
குலத்தெலாம் பொதுவாய் நிற்குங் கொழுந்தக வுறத்தின்
                               மாட்சி
புலத்தெலா மொல்லு மொல்லிற் பொருளிலாக்
                          குறையொன்றுண்டோ.