பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 549

குழையிடைக் குளித்த குளுமது முகைகள்
     கொய்துகொய் திமிழ்த்தவோர் கண்ணி
மழையிடைக் குளித்த மின்னெனத் தோன்ற
     
     மழையொத்தா ரதைக்கொணர்ந் துய்த்தார்.
 
கழை இடைக் குளித்த தேன் வடிந்து என்ன, கனிந்து இவை வளன்                                    விதித்திடும் கால்,
தழை இடைக் குளித்த நீல் நிற மேனித் தையலார் பொருக்கென ஓடி,
குழை இடைக் குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து,
                                   இமிழ்ந்த ஓர் கண்ணி
மழை இடைக் குளித்த மின் எனத் தோன்ற, மழை ஒத்தார் அதைக்
                                   கொணர்ந்து உய்த்தார்.

     கரும்பினுள் மறைந்து கிடந்த சாறாகிய தேன் வடிந்தாற்போல, சூசை
கனிவோடு இவற்றையெல்லாம் வேடருக்கு விதிமுறையாகச் சொல்லிக்
கொண்டிருக்கையில், தழைகளாலாகிய ஆடையிட்டு மூடிய கருநிற உடல்
கொண்ட வேடர் மகளிர் விரைந்து ஓடி, இலைகளிடையே மறைந்து கிடந்த
குளுமையான தேனைக் கொண்டுள்ள பூவரும்புகளைக் கொய்து கொய்து
அமைத்த ஒரு கண்ணி மாலை, கருமேகத்திடையே மறைந்து கிடந்த
மின்னல் போல் தம் கைகளில் தோன்ற, கருமேகத்தை ஒத்த அம்மகளிர்
அதைக் கொணர்ந்து, திருமகனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

 
                   141
வாடுமோர் மலரைச் சேர்த்திய படலை மாலையைக்
                கொணரவோ வோடிக்
கூடுமோர் பயனி தோவென நக்கான் குழவியாய்த்
                தோன்றிய நாதன்
கூடுமோ ரிணையற் றிலங்குநீ யையா கூவில்வா டிலமல
                ரல்லால்
வாடுமோர் மலரு மன்றியீங் குண்டோ மலரென
                வொருத்திநக் குரைத்தாள்.
 
"வாடும் ஓர் மலரைச் சேர்த்திய படலை மாலையைக் கொணரவோ,
                                         ஓடிக்
கூடும் ஓர் பயன், இதோ?" என நக்கான், குழவியாய்த் தோன்றிய
                                         நாதன்.