152 |
வானார் குடைகொடி
மல்கப் புடைபுடை
வானார் வருவது காணா ரனைவருங்
கானார் துயரிவர் காப்பக் கடிநகர்
கானார் மலரடி கண்டார் புகுதுக. |
|
வான் ஆர் குடை
கொடி மல்க, புடை புடை
வானார் வருவது காணார், அனைவரும்;
கான் ஆர் துயர் இவர் காப்ப, கடி நகர்
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக. |
அந்நகரத்தார்
அனைவரும், வானம் முழுவதும் நிறைந்த குடைகளும்
கொடிகளும் செறியக் கொண்டு, வானவர் எப்பக்கமும் வருவதைக்
கண்டிலர்; காட்டு வழியில் நிறையக் கொண்ட துன்பங்களைப் போக்கிக்
கொள்ளுமாறு, அம்மூவர்தம் மணம் நிறைந்த மலர் போன்ற அடிகள்
காவலுள்ள அந்நகருக்குள் புகுவதை மட்டும் கண்டனர்.
புகுதுக:
'புக' என்ற சொல்லின் விரித்தல் விகாரம். இதுபோல் அடுத்த
பாடல்களில் வருமிடத்தும் இதுவே இலக்கணமாகக் கொள்க.
153 |
தேன்றோய்
முகைமுகச் செல்வன் புகுதுக
மீன்றோய் மிளிர்முடி வேய்ந்தாள் புகுதுகக்
கான்றோய் கொடிவளர் கையான் புகுதுக
வான்றோய் மகிழ்வொடு கண்டார் வடுவற. |
|
தேன் தோய்
முகை முகச் செல்வன் புகுதுக,
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக,
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக,
வான் தோய் மகிழ்வொடு கண்டார், வடு அற. |
தேன்
தோய்ந்த பூவரும்பு போன்ற முகங்கொண்ட செல்வனாகிய
குழந்தை நாதன் புகவும், விண்மீன்கள் சூழ்ந்த ஒளி முடி அணிந்த மரியாள்
புகவும், மணம் தோய்ந்த மலர்க்கொடி தாங்கிய கையை உடைய சூசை
புகவும், தம் குற்றங்கள் நீங்கும்படி வான் அளாவிய மகிழ்வோடு அந்நகரத்தார் அவர்களைக்
கண்டனர்.
|